December 10, 2007

தமிழகத்திற்கு சேவையாற்றும் பா.ஜ.க முதல்வர்கள்

சுனாமி அரக்கன் தமிழகத்திற்கு விஜயம் செய்து வரும் டிசம்பர் 26-ம் தேதியோடு மூன்றாண்டுகள் நிறைவடைகிறது. சுனாமி வந்ததும் பல மாநில அரசுகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை அறிவித்தது. பல கிராமங்களைத் தத்தெடுத்து வீடுகளை கட்டித் தருவதாக பல மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்புகள் எல்லாம் அலையோடு அலையாய் கடலில் கரைந்து போனது. ஆனால் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி இருக்கிறார்கள்.

சேவாபாரதியின் தமிழக பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், சேவாபாரதி பொறுப்பாளர் சங்கரன் ஆகியோர் சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங்கிடம் வீட்டின் மாதிரியை ஒப்படைக்கின்றனர்


மத்திபிரதேச மாநில அரசு சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் 340 வீடுகளைக் கட்டி கொடுத்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநில அரசு நாகை மாவட்டம் பனங்குடியில் 125 வீடுகளைக் கட்டி கொடுத்திருக்கிறது. இதில் 40 சதவீத வீடுகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குஜராத் அரசு நாகை மாவட்டம் முட்டம் கிராமத்தில் 62 வீடுகளும், மேலமூவர்கரை கிராமத்தில் 88 வீடுகளையும் கட்டி கொடுத்திருகிறது. சுனாமி வந்ததும் முதன்முதலில் ரூ.5 கோடி நிதியை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தது நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுதான். ரமன் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு தற்காலிக வீடுகளைக் கட்ட 10 ரயில்வே வேகன்களில் சவுக்கு மரங்களை அனுப்பியது. அதோடு 10 ரயில்வே வேகன் அரிசியையும் அனுப்பியது. குஜராத் அரசு 3 மொபைல் மெடிக்கல் வேன்களை சுனாமி பாதித்த பகுதிகளில் மருத்துவ சேவையாற்றுவதற்காக சேவாபாரதிக்கு தந்துள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

மத்திய பிரதேச முதல்வர் சிவரஜ்சிங் சவுகான்


மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மாநில அரசுகளைத் தவிர வேறு எந்த அரசும்(தமிழக அரசு உட்பட) இதுவரை ஒரு வீட்டைக்கூட கட்டித்தரவில்லை. ஆனால் இந்த மாநில முதல்வர்களோ அமைச்சர்களோ சுனாமி நிவாரணப் பணிக்காக தமிழகம் வந்தால் அவர்களுக்கு புரட்டக்கால்படி தமிழக அரசு வரவேற்பும் மரியாதையும் தருவதில்லை. சத்தீஸ்கர் மாநில அரசு கட்டித் தந்துள்ள வீடுகளின் திறப்பு விழாவிற்கு அம்மாநில முதல்வர் ரமன் சிங்கை சேவாபாரதியின் நிர்வாகிகள் அழைத்துள்ளனர். அப்போது இதனைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். ஆனாலும் வீடுகள் திறப்பு விழாவிற்கு வர சம்மதித்துள்ளார். மற்ற மாநில அரசுகள் செய்யாததை பா.ஜ.க மாநில அரசுகள் செய்துள்ளது. தமிழகத்திற்கு நலப்பணிகளை நிறைவேற்றி வரும் நரேந்திர மோடி, ரமன் சிங், சிவராஜ்சிங் சவுகான் ஆகியோருக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

No comments: