December 07, 2007

மலேசியாவில் என்ன நடக்கிறது? இந்து உரிமை நடவடிக்கை குழு தலைவர் வேதமூர்த்தி பேட்டி

4-12-2007 சென்னை பிரஸ் கிளப்பிலும் அதன் பிறகு இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் அவர்களுடனான சந்திப்பின்போதும் மலேசிய இந்து உரிமை நடவடிக்கை குழு தலைவர் திரு.வேதமூர்த்தி மலேசியாவின் இன்றைய நிலை பற்றி கூறியவற்றின் சுருக்கம்:

150 ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைத் தோட்டங்களை அமைப்பதற்காக தமிழகத்தில் இருந்து பல்லாயிரம் தமிழர்கள் பிரிட்டிஷ்காரர்களால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படிச் சென்ற தமிழர்கள் அடர்ந்த கருவேல மரக்காடுகளை தேயிலைத் தோட்டங்களாக மாற்றினார்கள். தேயிலை உற்பத்தியில் இலங்கைக்கு மிகப்பெரிய இடத்தைப் பெற்றுத் தந்தார்கள். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் மலேசியாவிற்கும் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் பிரிட்டிஷ்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் ரப்பர் தோட்டங்களை உருவாக்கி மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தினார்கள்.மலேசியாவில் தோட்டங்களில் குடியேறிய தமிழர்கள் தங்கள் குல தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், கருப்பண்ணசாமி, முனியாண்டி, சுடலையாண்டி, முருகன் என்று பல கோயில்களைக் கட்டி வழிபட்டு வந்தனர். நான்கு தலைமுறைகளாக அந்த ஆலயங்கள் அங்குள்ள இந்துக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டன. 150 ஆண்டுகள் ஆனாலும்கூட தமிழர்களை முஸ்லிம்களின் பிடியில் உள்ள மலேசிய அரசு இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தி வருகிறது. மலேசியாவின் மொத்த மக்கள் தொகை இரண்டே முக்கால் கோடி. இதில் தமிழர்களின் எண்ணிக்கை 20 லட்சம்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது சீனர்களும், முஸ்லிம்களும் செல்வாக்கோடு இருந்தனர். வியபாரம் முழுக்க முழுக்க அவர்கள் கையிலேயே இருந்தது. 1957ல் மலேசியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த மலேசிய அரசு `மண்ணின் மைந்தர்' கொள்கையை கடைபிடித்து வருகிறது. முஸ்லிம்களுக்கும், சீனர்களுக்கும் சலுகைகள் குவிந்தன. கல்வி, அரசு வேலைகள், வங்கி கடன்கள், அரசு கான்டிராக்ட்கள் என்று அனைத்திலும் முஸ்லிம்களுக்கும், மலாய்காரர்களுக்குமே முன்னுரிமை. வீடு கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம்கூட முஸ்லிம்களைவிட தமிழர்களுக்கு அதிக விலைக்குதான் விற்கிறார்கள். ஓர் இந்து தொழில் தொடங்க வேண்டுமானால் யாராவது ஒரு முஸ்லிம் அல்லது மலாய்காரரோடு கூட்டு சேர்ந்துதான் ஆரம்பிக்க முடியும். இதனால் ஒரு முஸ்லிம் அல்லது மலாய் ஒரு பைசா முதலீடு செய்யாமல் இந்துக்களுடன் கூட்டு சேர்ந்து லாபத்தில் சரிபாதி பங்கு போட்டுக் கொள்கிறார்கள். முஸ்லிம்கள் மற்றும் மலாய் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. ஆனால் இந்து குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நிதி எதுவும் ஒதுக்காமல் புறக்கணிக்கிறது.


கடந்த சில ஆண்டுகளாக இந்துக்களின் கோயில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது. அனுமதி பெறாத கட்டடங்கள் என்று சொல்லி இந்து கோயில்களை குறி வைத்து இடித்து வருகிறது மலேசிய அரசு. புதிதாக சாலை அமைக்கும்போது மசூதி இருந்தால் சாலையின் பாதையையே மாற்றி வளைவாக போடுகிறார்கள். இந்து கோயில்கள் வந்தால் மட்டும் இடித்து விடுகிறார்கள். இதுவரை சிறிதும் பெரிதுமாக சுமார் 7,000 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஆப்பில், சோனி போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் மலேசியாவில் கால் பதித்துள்ளன. ஆனால் இந்துக்கள் மட்டும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் துர்பாக்கிய நிலை இன்னமும் உள்ளது.
மலேசிய இந்துக்களின் இன்றைய அவலநிலைக்கு பிரிட்டிஷ் அரசு தான் காரணம். அதனால் ரூ 14 லட்சம் கோடி நஷ்ட கேட்டு பிரிட்டிஷ் அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்துக்களின் உரிமைகளை மீட்டுத்தர வேண்டியது பிரிட்டிஷ் அரசின் கடமை. அதனால்தான் நவம்பர் 25-ம் தேதி பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். இது 20 லட்சம் இந்துக்களின் வாழ்க்கை பிரச்சினை. இந்துக்கள் சிந்திய வியர்வையும் ரத்தமும்தான் மலேசியாவை இந்த அளவுக்கு முன்னேற்றி இருக்கிறது. இந்துக்களை இனியும் மலேசிய அரசு புறக்கணிக்க முடியாது.
(இராம.கோபாலன் உடனான சந்திப்பிற்கு பிறகு நானும் இராம.கோபாலனின் உதவியாளர் இராம.ரவிக்குமாரும் அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் விட்டுவிட்டு திரும்பினோம்.)

No comments: