December 07, 2007

இராம.கோபாலன் - வேதமூர்த்தி சந்திப்பு

4- 12- 2007 அன்று மதியம் 1 மணிக்கு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் அவர்களை மலேசிய இந்து உரிமை நடவடிக்கை குழு தலைவர் வேதமூர்த்தி சந்தித்தார். இந்தச் சந்திப்பு மதியம் 2.30 வரை நீடித்தது. இந்தச் சந்திப்பின்போது விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர் நா.சடகோபன், இந்து முன்னணி சார்பில் வெளிவரும் மாத இதழான பசுத்தாய் இதழின் ஆசிரியர் கணேசன், இராம.கோபாலனின் உதவியாளர் இராம.ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இராம.கோபாலனை சந்திக்க வருவதற்கு முன் வேதமூர்த்தி சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் அவர்களைச் சந்திக்க இருப்பதை பத்திரிகையாளர்க்ளிடம் சொன்னார் வேதமூர்த்தி. இராம.கோபாலனை ஏன் சந்திக்க வேண்டும்? என பல நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் "நான் முதல்வர் கலைஞர், காங்கிரஸ், கம்யூனிஸ்டு என பல தலைவர்களைச் சந்திக்கிறேன். அதுபோல இந்துத் தலைவரான இராம.கோபாலனை சந்திக்க இருக்கிறேன்" என பதிலளித்துள்ளார்.


வேதமூர்த்திக்கு இராம.கோபாலன் பொன்னாடை போர்த்துகிறார்.


வேதமூர்த்திக்கு விஜயபாரதம் ஆசிரியர் நா.சடகோபன் பொன்னாடை போர்த்துகிறார்.

சென்னை பிரஸ் கிளப்பில் இருந்து வேதமூர்த்தியை இராம.கோபாலனின் உதவியாளர் இராம.ரவிக்குமார் தன் இரு சக்கர வாகனத்திலேயே அழைத்து வந்து விட்டார். "நான் உங்களை முதலிலேயே சந்தித்து இருக்க வேண்டும். தாமதமாக சந்திக்கிறேன்" என்று கூறியபடியே இராம.கோபாலனிடம் ஆசி பெற்றார் வேதமூர்த்தி. நீக்கள் என்னை கடைசியாக சந்திப்பதுதான் சரி என்றார் இராம.கோபாலன். செனனை லயோலா கல்லூரி எதிரே உள்ள மலேசிய தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானததற்காக இராம.கோபாலனுக்கு நன்றி தெரிவித்தார் வேதமூர்த்தி. "மலேசிய அரசின் அடக்குமுறையை எதிர்த்து துணிவுடன் போராடும் உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன். மலேசிய அரசின் கெடுபிடிகளை மீறி நவம்பர் 25-ம் தேதி 1 லட்சம் இந்துக்கள் திரண்டிருக்கிறார்கள். உங்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்." என்றார் இராம.கோபாலன்.

இராம.கோபாலனுடன் உரையாடுகிறார் வேதமூர்த்தி



"மலேசிய இந்து உரிமை நடவடிக்கை குழுவில் 10 பேர்தான் இருக்கிறோம். நவம்பர் 25-ம்தேதி நாங்கள் அழைப்பு விடுத்த பேரணிக்கு 20,000 பேர்தான் வருவார்கள் என்று பார்த்தோம். ஆனால் 1 லட்சம் பேர் வந்து மலேசிய அரசுக்கு அதிச்சி அளித்துவிட்டார்கள். பேரணிக்கு யாரும் வரக்கூடாது என்பதற்காக பேருந்து உள்பட அனைத்து போக்குவரத்தையும் அரசு தடை செய்து விட்டது. இந்துக்கள் யாருக்கும் பஸ், வேன் போன்ற வாகனங்களைத் தரக்கூடாது என தனியார் வாகன உரிமையாளர்களை அரசு மிரட்டியதால் அவர்கள் வாகனங்களைத் தர மறுத்து விட்டார்கள். இதனால் பேரணி ஆரம்பமாகும் இடத்தின் அருகே உள்ள மண்டபங்கள், ஹோட்டல்களில் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகள் நடப்பதாக அழைப்பிதழ்கள் அச்சடித்து அதனைக் காட்டி பஸ், வேன்களைப் பிடித்து பேரணிக்கு இந்துக்கள் வந்து விட்டார்கள்.
"இதற்கு சில மாதங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் அல்லாத மலாய்காரர்கள் பேரணி நடத்தினார்கள். போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததும் அவர்கள் கலைந்துச் சென்று விட்டார்கள். ஆனால் நவம்பர் 25-ம் தேதி தண்ணீர், கண்ணீர் புகை என இடைவிடாது போலீசார் பீய்ச்சி அடித்தும் இந்துக்கள் அசராமல் இறுதிவரை போராடினார்கள்.


இதனால் ஆத்திரமடைந்த அரசு பலரை கைது செய்து வழக்கு தொடர்ந்தது. என்னையும் கைது செய்ய போலீஸ் பட்டாளத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். என்னை கைது செய்தால் அதனை படம் பிடிக்க மீடியாக்காரர்கள் கேமராக்களுடன் காத்திருந்தார்கள். இந்துக்களின் உரிமைகளை நிலைநாட்டும் போராட்டத்திற்கு இந்தியாவிலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் ஆதரவு திரட்டுவதற்காக சிங்கப்பூர் வழியாக இந்தியா வந்துள்ளேன்" என்றார் வேதமூர்த்தி.
வேதமூர்த்தியை வாசல்வரை வந்து வழியனுப்புகிறார் இராம.கோபாலன்
4-12-2007 அன்று செய்தியாளர்கள் கூட்டத்திலும், நாங்கள் வேதமூர்த்தியுடன் இருந்த 3 மணி நேரத்தில் வந்த எல்லா தொலைபேசி அழைப்புகளிலும் "நீங்கள் ஏன் உங்கள் அமைப்புக்கு இந்து என்று பெயர் வைத்துள்ளீர்கள். தமிழர்கள் அல்லது இந்திய வம்சாவளினர் என்று பெயர் வைக்கலாமே" என எல்லோரும் சொல்லி வைத்தாற்போல கேள்வி எழுப்பினார்கள். ஒரு கட்டத்தில் என்ன எல்லோரும் இப்படி கேட்கிறார்கள் என்று சலித்துக் கொண்டார் வேதமூர்த்தி.

1 comment:

Anonymous said...

உலகில் உள்ள தமிழர்களுக்கெல்லாம் தலைவன் என்று சொலப்படுபவர்களும் இருக்கிறார்கள்; ஆனால், தமிழர்களுக்காக மலேஷிய தூதரகத்தின் முன் நின்று போராடும் பாசம் பற்று ராமகோபாலன் அய்யாவிடம்தான் வெளிப்படுகிறது.

இந்தியர்கள் கடல்தாண்டினாலும் அவர்களுக்காகப் போராட தமிழர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பது நிம்மதியாக இருக்கிறது.

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பிற்கு காரணமானவர்களுக்கும், இந்த சந்திப்பின் முழுவடிவை வெளியிட்ட தங்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்.