June 15, 2007

தந்தையை மீட்ட தனயன்


செஞ்சிக் கோட்டையை சமணர்கள் முதல் ஆங்கிலேயர்கள் வரை எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும் செஞ்சிக் கோட்டை என்றதும் ராஜா தேசிங்கு என்ற பெயர்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறது. இத்தனைக்கும் ராஜா தேசிங்கு 18 வயது வரைதான் வாழ்ந்தார். மொகலாய பேரரசின் படைத்தளபதியாக இருந்த ராஜபுத்திர வீரன் சொரூப்சிங் அந்தப் பேரரசின் எல்லையை விரிவுபடுத்த பெரிதும் துணைபுரிந்தார். இதனால் அவர் கி.பி. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொகலாயர்களின் வசம் இருந்த செஞ்சிப் பகுதியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சொரூப்சிங்கிற்கும் ராமாபாய்க்கும் மகனாகப் பிறந்த தேஜஸ்சிங் தான் ராஜா தேசிங்கு என அழைக்கப்படுகிறார். போர்க் கருவிகளைக் கொண்டு விளையாடுவதும், புலிகளுடன் சண்டையிடுவதும்தான் சிறுவயதில் தேசிங்கின் பொழுதுபோக்காக இருந்தது. டில்லி அரசரிடம் இருந்த நீலவேணி என்ற குதிரையை அடக்கச் சென்ற தேசிங்கின் தந்தை அதை அடக்க முடியாமல் தோல்வியுற்றதால் சிறைப்படுத்தப்பட்டார். இதை தன் தாய் மூலம் கேள்விப்பட்ட 15 வயது சிறுவனான தேசிங்கு, டில்லி சென்று நீலவேணி என்ற குதிரையை அடக்கி தந்தையை சிறையிலிருந்து மீட்டார். யாராலும் அடக்க முடியாத குதிரையை அடக்கியதால் டில்லி அரசர் நீலவேணி குதிரையை தேசிங்கிற்கு பரிசளித்ததோடு, தனது படைத்தலைவன் பீம்சிங்கின் மகளையும் திருமணம் செய்து வைத்தார்.
மகனால் சிறையிலிருந்து மீட்கப்பட்ட சொரூப்சிங் மீண்டும் செஞ்சிக் கோட்டைக்கு வந்து ஆட்சியை தொடர்ந்தார். சொரூப்சிங் இறந்ததும் டில்லி அரசருக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்ட ராஜா தேசிங்கு மறுத்ததால் அவர் ராஜாவாக முடிசூட்டிக் கொள்வதை ஆற்காடு நவாப் எதிர்த்தான். ஆனால் இளம் சிங்கமான தேசிங்கு தனது பரம்பரை உரிமையை விட்டுக் கொடுக்காமல் எதிர்ப்புகளைத் தகர்த்தெறிந்துவிட்டு தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டார். ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான் போர் தர்மத்தை மீறி தொடுத்த ஒரு போரில் நயவஞ்சகமாக தேசிங்கு கொல்லப்பட்டார். அப்போது ராஜா தேசிங்கிற்கு வயது 18தான். ராஜா தேசிங்கின் உடல் செஞ்சியில் ஹிந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது. கணவனின் பிரிவைத் தாங்கமுடியாமல் தேசிங்கின் மனைவியும் உயிர் துறந்தாள். தேசிங்குராஜன் மற்றும் அவரது படைத்தளபதி மகம்மதுகானின் சமாதி செஞ்சிக்கு அருகில் உள்ள நீலாம் பூண்டி கிராமத்தில் இன்றும் உள்ளது. இங்கு தேசிங்கின் நீலவேணி குதிரைக்கும் சமாதி கட்டப்பட்டுள்ளது. இப்படி18 வருடங்களே வாழ்ந்த ராஜா தேசிங்கின் வரலாறு, நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ராஜா தேசிங்கின் வீரத்தை நினைவு கூரும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்றும் செஞ்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பாடப்பட்டு வருகிறது. ஹிந்து மன்னர்களின் வீரதீரத்திற்கு ராஜா தேசிங்கு ஒரு சிறந்த உதாரணம்.

1 comment:

Anonymous said...

has anybody recorded the folk songs on Raja desingu?