சளைக்காமல் உழைத்த சேவாபாரதி பெண்கள்!
26-08-2007 அன்று ராமேஸ்வரத்தில் நடந்த ராமசேது பாதுகாப்பு மாநாட்டில் பெரும்பாலான ஏற்பாடுகளை பெண்கள்தான் கவனித்துக் கொண்டார்கள். சேவாபாரதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குச் சென்று மாநாட்டிற்காக மக்களை அழைத்துள்ளனர். இப்படி கிராமங்களுக்குச் சென்ற சில பெண்களிடம் நான் பேசினேன். கிட்டத்தட்ட 15 நாட்கள் அவர்கள் கிராமங்களில் மாநாட்டிற்காக பிரச்சாரம் செய்துள்ளனர். 15 நாட்களும் எங்கே தங்கியிருந்தீர்கள் என்றேன். கிராமங்களிலேயே தங்கி விட்டோம். மக்கள் எங்களை நன்றாக உபசரித்தார்கள் என்றார்கள்.
பல கிராமங்களில் மக்கள் பாம்பனையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாம்பன் பாலத்தைதான் இடிக்க போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பஸ் போகும் பாலத்தை இடித்துவிட்டால் நாங்கள் எப்படி கோயிலுக்கு போறது? என்று பல கிராமவாசிகள் சேவாபாரதி பெண்களிடம் கேட்டிருக்கிறார்கள். ராமநாதசுவாமி மீது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராம மக்கள் உயிரையே வைத்துள்ளார்கள். பல கிராமங்களில் சேவாபாரதி ஊழியர்கள் அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு டியூசன் எடுத்திருக்கிறார்கள். பண்பாட்டு வகுப்பு நடத்தி மாணவர்களுக்கு சில ஸ்லோகங்களை மனப்பாடம் செய்வித்திருக்கிறார்கள். திருவிளக்கு பூஜை நடத்தியிருக்கிறார்கள்.
எல்லா கிராமங்களிலும் சேது சமுத்திர திட்டம் வந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது என்றுதானே செல்கிறார்கள். நீங்கள் வேறு மாதிரி சொல்கிறீர்களே என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற பல வழிகள் இருக்கின்றன. ஆனால் அரசு ராமர் கட்டிய ராமர் பாலத்தை இடித்துவிட்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார்கள். ராமர் பாலத்தை இடிப்பதைதான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.
மீனவ கிராமங்களில் இவர்களுக்கு வேறு மாதிரியான அனுபவம். மீனவர்கள் சேது சமுத்திர திட்டத்தையே எதிர்க்கிறார்கள். சேது சமுத்திர திட்டத்தையே எதிர்ப்பதாக இருந்தால் நாங்கள் மாநாட்டிற்கு வருகிறோம் என்று செல்லியிருக்கிறார்கள். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் முற்றிலுமாக மீன்வளம் அழிந்துவிடும் என்று மீனவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். கிராமங்களுக்குச் சென்று மக்களை மாநாட்டிற்கு அழைத்ததோடு இவர்கள் ஓய்ந்துவிடவில்லை. மாநாட்டு ஏற்பாடுகளிலும் ஆர்வமாய் களமிறங்கி கலக்கி விட்டார்கள். மாநாட்டு பந்தலில் நாற்காலிகள் போடுவது, தரைவிரிப்புகள் விரிப்பது, மாநாட்டிற்கு வந்தவர்களை வரவேற்பது, தண்ணீர் வழங்குவது என மூன்று நாட்களும் சேவாபாரதியைச் சேர்ந்த பெண்கள் சளைக்காமல் உழைத்தார்கள். அவர்கள் சேவையாற்றும்போது எடுத்த சில படங்களை பாருங்கள்...
No comments:
Post a Comment