October 13, 2007

தம்மம்பட்டியில் உண்ணாவிரதம் இருந்த ஹிந்துக்கள் மீது போலீசார் தடியடி - பொய் வழக்கு!


கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் உள்ள மசூதியின் ஒலிபெருக்கி திடீரென அலறியது. "மசூதியின் வாசல் எதிரே விநாயகர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிலையை அகற்றப் போராட்டம் நடத்த வேண்டும். இனி ஹிந்துக் கடைகளில் பொருள்கள் வாங்கக்கூடாது. மானமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக ரோட்டிற்கு வரவேண்டும்" என்று அந்த ஒலிபெருக்கியிலிருந்து கட்டளை, காற்று வழியாக பறந்து வந்தது. உடனே 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தம்மம்பட்டி - திருச்சி நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் செய்தனர். இந்த மறியலில் குறிப்பிடத் தக்க அளவில் முஸ்லிம் பெண்களும் பங்கேற்றனர்.


சாலை மறியலில் ஈடுபட்ட முஸ்லிம்கள் தம்மம்பட்டி காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபடும் செய்தி பரவியது. தம்மம்பட்டியில் பதட்டம் ஏற்பட்டது. இதனால் இந்து முன்னணி போன்ற ஹிந்து இயக்கத் தலைவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர். ஹிந்து இயக்கத் தலைவர்கள் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தி பரவியதும், ஹிந்துக்கள் அனைவரும் வீதிக்கு வரத் தொடங்கினர். மாலை 3 மணி அளவில் யாரும் எந்த அழைப்பும் விடுக்காத போதும் ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு வீதியில் குவிந்தனர்.

ஹிந்துக் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள் என்றும் மானமுள்ள முஸ்லிம்கள் வீதிக்கு வரவேண்டும் என்றும் மசூதி ஒலிபெருக்கியில் அறிவித்தது ஹிந்துக்களைக் கொதிப்படையச் செய்தது. 1989 இல் தம்மம்பட்டியில் முருகன் கோயில் ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் நடத்திய கலவரமும் அதில் இரண்டு ஹிந்துக்கள் கொல்லப்பட்டதும் மக்களின் மனதில் மறையாத வடுவாக இருந்ததால் இந்த முறை ஹிந்துக்கள் விழிப்புடன் போராடத் தயாரானார்கள்.


செப்டம்பர் 15 ஆம் தேதி தம்மம்பட்டியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. தம்மம்பட்டி - திருச்சி நெடுஞ்சாலையில் 3000 க்கும் அதிகமான ஹிந்துக்கள் கூட்டமாகத் திரண்டிருந்தனர். இந்தச் சூழ்நிலையில் இரவு 7 மணிக்கு கமிஷனர் கோபாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி.செண்பகராமன் தலைமையில் ஹிந்து - முஸ்லிம் பிரதிநிதிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் பிரதிநிதிகள், குறிப்பாக வீட்டு வசதி சங்கச் செயலாளர் ஜாபர் சாதிக் அலி, "பாகிஸ்தான் ஜிந்தாபாத்! இது முஸ்லிம்கள் நாடு. நீங்கள் நேபாளத்திற்கு போங்கள். அங்கு போய் சிலை வையுங்கள்" என்று ஆணவமாகப் பேசியதால் பேச்சு வார்த்தை முறிந்தது.

ஹிந்துக்களை `நேபாளத்திற்குப் போங்கள்' என்று முஸ்லிம்கள் பேசிய தகவல்கிடைத்ததும் நடுரோட்டில் திரண்டிருந்த ஹிந்துக்களின் உள்ளம் கொதித்தது. ஹிந்து இயக்கத் தலைவர்கள் அவர்களை அமைதிப்படுத்தினார்கள். இந்த நிலையில் கோட்டாட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் இரவு 9 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைத் துவங்கியது. ஹிந்துக்கள் தரப்பில் பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.சி.தண்டபாணி, பா.ஜ.க மாவட்டப் பொறுப்பாளர் பி.கந்தசாமி உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டனர். அப்போது விநாயகர் சிலை ஏன் மசூதி வாசல் அருகில் வைக்கப்பட்டது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. "மசூதி வாசல் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இடமாற்றம் செய்யப்பட்டது. முன்பு மேற்குப் புறத்தில் இருந்த வாசல் இப்போது கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தின் முன்பு மாற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் ஆண்டுதோறும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் மசூதி வாசலை மாற்றிவிட்டு சிலை வைக்கக்கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?" என்று ஹிந்துக்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனை தம்மம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் அம்சவள்ளி அவர்களும் உறுதிப்படுத்தினார்.
விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதா? என்ற கேள்விக்கு, "பல வருடங்களாக எங்கு விநாயகர் சிலை வைக்கப்பட்டாலும் காவல்துறைக்கு தகவல் கொடுத்து விட்டே வைக்கிறோம். இந்த ஆண்டும் தகவல் கொடுக்கப்பட்ட பிறகே சிலை வைக்கப்பட்டது. முஸ்லிம்கள் பிரச்சினை செய்யும் கன்னிகா பரமேஸ்வரி கோயில் அருகிலும் அனுமதி பெற்றே சிலை வைத்தோம். காவல்துறை எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை" என்பதை ஹிந்துப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினார்கள்.


ஹிந்துக்கள் தரப்பில் நியாயம் இருந்ததால் பேச்சுவார்த்தை ஹிந்துக்களுக்கு சாதகமாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் காவல்துறையின் பெரும்பகுதியினர் விநாயகர் சிலையை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். ஆளும் கட்சி மற்றும் காவல்துறையின் ஹிந்து விரோதப் போக்கின் காரணமாக கையெழுத்துப் பெற்று சிலையை அகற்றுவது அல்லது ஹிந்துப் பிரதிநிதிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துவிட்டு, சிலையை அகற்றுவது என்று போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதற்காக வெளியே கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் மீது தடியடி நடத்திடவும் போலீசார் திட்டமிட்டிருந்த செய்தியினை அவர்களின் நடவடிக்கையின் மூலம் ஹிந்துப் பிரதிநிதிகள் அறிந்து கொண்டனர்.

எக்காரணத்தை முன்னிட்டும் கலவரம் ஏற்பட்டுவிடக் கூடாது. இந்தப் பிரச்சினையால் எந்த ஒரு ஹிந்துவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது' என்பதில் ஹிந்துப் பிரதிநிதிகள் உறுதியாக இருந்தனர். இதனால் போலீசாரின் ஒரு சில நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்தனர். அதன்படி மசூதி மற்றும் விநாயகர் சிலை இவற்றிற்கு நடுவே திரைச்சீலை அமைப்பது என்றும், தொழுகை நேரத்தில் மேளதாளங்கள் ஒலிப்பதில்லை என்றும் விருப்பம் இல்லாவிட்டாலும் ஹிந்துக்கள் பொது அமைதி கருதி இவற்றிற்கு ஒப்புக்கொண்டனர். இது நடந்த போது இரவு 11.30 மணி. அந்த நேரத்தில் ஹிந்துப் பிரதிநிதிகள் வெளியே வந்து, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் நிலைமையை எடுத்துக் கூறினர். அவர்களிடம், சிலையை ஏன் மறைக்க வேண்டும்? பூஜை நேரத்தை ஏன் மாற்றவேண்டும்? என்று சரமாரியாக மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனால் பதட்டம் அதிகரித்தது. இந்தப் பதட்டம் கலவரமாக மாறிவிடக் கூடாது என்பதால், "உடனடியாகக் கலைந்து செல்லுங்கள். நாளை (செப்டம்பர் 16) காலை 10 மணிக்கு பஸ்நிலையம் அருகில் உள்ள ஊராட்சித் துவக்கப்பள்ளிக்கு அனைவரும் வாருங்கள்" என்று கூறி சூழ்நிலையை சுமூகமாக்கினார்கள்.


செப்டம்பர் 16 ஆம் தேதி ஞாயிறன்று தம்மம்பட்டி நகரமே மயான அமைதியில் ஆழ்ந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.பொதுமக்கள் அனைவரும் பஸ்நிலையம் அருகில் உள்ள ஊராட்சி துவக்கப்பள்ளியில் திரண்டனர். திரைச்சீலை வைப்பதற்கு ஒப்புதல் பெற்ற போலீசார், விநாயகர் சிலையைச் சுற்றி தகர சீட்களை வைத்து அடைத்தனர். திரைச்சீலை வைத்து மறைப்பதையே ஏற்றுக்கொள்ளாத ஹிந்துக்கள் காவல்துறையின் இந்த முறைகேடான செயலால் கொதிப்படைந்தனர். இதனால் சூழ்நிலை மேலும் மோசமாகியது. ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சித் துவக்கப்பள்ளியில் குவிந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய இந்து முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.சி.தண்டபாணி செப்டம்பர் 15 ஆம் தேதி பேச்சுவார்த்தையின் போது நடந்தது என்ன என்பதையும், எந்த ஒரு ஹிந்துவும் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாது என்பதற்காகவும், ஹிந்துக்களின் உடைமைகளுக்கு சேதம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் விருப்பம் இல்லாத போதிலும் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கினார். ஆனால் போலீசார் ஒப்புக்கொண்ட படி நடந்து கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். அதனால் இனி ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் இந்து முன்னணி மற்றும் இந்து இயக்கங்கள் உடன்படும் என்று தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஊர்மக்கள் இனி நாமே முடிவு செய்வோம் என்றனர். இங்குக் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாலை 3 மணிக்கு ரெட்டியார் மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் என அறிவித்தனர். மாலை 4 மணிக்கு ஜாதிக்கு மூன்று பேர் என 36 ஜாதிகளை சேர்ந்த 135 க்கும் மேற்பட்டோர் கூடி விவாதித்தனர். அப்போது மண்டபத்தில் 2,000 க்கும் அதிகமான பொதுமக்கள் கூட்டம் நடந்த உணவுக் கூடத்திற்கு வெளியே காத்திருந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (பார்க்க : பெட்டிச் செய்தி) இந்தத் தீர்மானங்களில் அனைத்து ஜாதிப் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர். இரவு 8 மணிக்கு இந்தத் தீர்மானத்தின் நகலைக் காவல்துறையிடம் ஒப்படைப்பது என முடிவு செய்தனர். அதற்குள் பொதுமக்களின் இரண்டு நாள் தொடர் போராட்டம், 3,000 க்கும் அதிகமான மக்களின் கூட்டம் இவற்றைக் கண்ட காவல்துறை விநாயகர் சிலைக்கு முன்பு இருக்கும் தகரத் தடுப்பை மட்டும் அகற்றியது.


தகரத் தடுப்பு அகற்றப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட மக்கள் அந்தச் சிலையை வழிபட ஊர்வலமாகச் சென்றனர். காவல்துறையினர் ஹிந்துக்களுக்கு விரோதமாக இருக்கும்போது ஆயிரக் கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றால் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். காவல்துறையினர் ஹிந்துக்களின்மீது தடியடி நடத்தலாம் என்பதால் ஹிந்து இயக்கப் பொறுப்பாளர்களும், ஊர்த்தலைவர்களும் மக்கள் ஊர்வலமாகச் செல்வதை தடுத்தனர். மக்களை சிறிது சிறிதாகக் கலைத்து வீட்டுக்கு அனுப்பினர். ஆனால் மண்டப வாயிலில் கூடியிருந்த மக்கள் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் பேருந்து நிலையத்தில் கூடினார்கள். அந்த இரவிலும் 2,000 க்கும் அதிகமான பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனர். சூழ்நிலை மிகவும் அபாயகரமாக இருந்தது. திரண்டிருந்த 2,000 ஹிந்துக்களைச் சுற்றி காவல்துறையினர் ஒரு வளையம் அமைத்தனர். இதனால் ஹிந்து இயக்கத்தினர் உதவியுடன் இளைஞர்கள் தனித்தனியாக பேசி மக்கள் அனைவரையும் அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பினார்கள்.
இந்நிலையில் இரவு 11 மணிக்கு கோட்டாட்சியாளர் பாஸ்கரபாண்டியன் ஹிந்துக்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது சேகர் என்ற தனிநபர் காவல் துறையினரின் கைப்பாவையாக மாறி ஊர்த் தலைவர்கள் எடுத்த முடிவுக்கு எதிராக சில கருத்துக்களைக் கூறி நிலைமையைக் குழப்பினார். ஊர்த் தலைவர்கள் சேகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் காவல் துறையினர் கூட்டம் முடிந்து விட்டது என்று அவசர அவசரமாக வெளியேறிவிட்டார்கள்.


செப்டம்பர் 16 ஆம் தேதி காலை நடந்த ஊர்க் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி மறுநாள் (செப்டம்பர் 17) ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றினார்கள். கருப்பு பேச் அணிந்து பஸ்நிலையத்தில் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்தனர். இதனால் மூன்றாவது நாளும் மயான அமைதியுடனே விடிந்தது. மூன்றாவது நாளாக அன்றும் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த மூன்று நாளும் கடைகளை அடைக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. மக்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு சுமார் 750 க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பேச் அணிந்து பஸ் நிலையத்தில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. சுமார் 12 மணி அளவில் 500 பெண்கள் உட்பட 2,000 க்கும் அதிகமானோர் உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்திருந்தனர். இந்த உண்ணாவிதரம் கலவரத்தில் முடிந்துவிடக் கூடாது என்பதற்காக ஹிந்து இயக்கப் பொறுப்பாளர்களும், ஊர்த்தலைவர்களும் மைக்கில் பேசுவதைக் கூட தவிர்த்தனர். ஹிந்து மக்களின் ஒற்றுமையையும் போராட்ட வேகத்தையும் கண்ட அரசு பணிய ஆரம்பித்தது. கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஒரு அரசு அதிகாரிகள் குழு முஸ்லிம்களிடம் பேச்சுவார்த்தைக்குச் சென்றது. 12.30 மணிக்கு பஸ் நிலையத்தில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த இடத்துக்கு வந்த கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியன் ஹிந்துப் பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று அழைத்தார். எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் முன்னிலையில் தான் பேசவேண்டும் என்று ஹிந்துப் பிரதிநிதிகள் கூறிவிட்டனர். செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேச வாய்ப்பளிக்காததைச் சுட்டிக்காட்டி கோட்டாட்சியர் பாஸ்கரபாண்டியனின் அழைப்பை ஹிந்துப் பிரதிநிதிகள் நிராகரித்தனர்.


"நான் முஸ்லிம்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் ஹிந்துக்கள் இல்லாமல் நாங்கள் வாழ முடியாது. ஹிந்துக்களுடன் இணக்கமாகவே வாழ விரும்புகிறோம். எங்கள் சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் வழி தவறிப்போய் அரசியல் ஆதாயத்திற்காக பிரச்சினை செய்துவிட்டனர். அவர்கள் விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளட்டும். திரையை எடுத்து விடலாம் என்றும் முஸ்லிம்கள் கூறினார்கள். எனவே என்னுடன் வாருங்கள். திரையை அகற்றிவிடலாம் " என்று கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியன் அவராகவே முன்வந்து ஹிந்துப் பிரதிநிதிகளிடம் கூறினார். உடனடியாக ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.சி.தண்டபாணி தலைமையில் சிலர், கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியனுடன் சேர்ந்து திரையை அகற்றி விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
தம்மம்பட்டி பஸ் நிலையம் அருகே வெங்கடேஸ்வரா என்ற பெயரில் முஸ்லிம் ஒருவர் கடை நடத்தி வருகிறார். `ஹிந்துக் கடவுளின் பெயரில் முஸ்லிம் கடை நடத்தக் கூடாது. பெயரை மாற்றவேண்டும்' என்று உண்ணாவிரதப் பந்தலில் இருந்த மக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்தனர். உண்ணாவிரதம் இருந்த சில இளைஞர்கள் இப்போதே வெங்கடேஸ்வரா என்ற பெயர்ப் பலகையை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இந்த நேரத்தில் நாமக்கல் எஸ்.பி.நிக்கல்சன் ஹிந்துக்கள்மீது தடியடி நடத்த உத்தரவிட்டார். எஸ்.பி.உத்தரவிட்டதும் போலீசார் காட்டுமிராண்டித்தனமாக ஹிந்துக்களை தாக்கத் தொடங்கினார்கள். போலீசாரின் இந்த மனிதாபிமானமற்ற தடியடியில் கர்ப்பிணிப் பெண் உட்பட 9 தாய்மார்கள் பலத்த காயமடைந்தனர். ஹிந்து இயக்கத் தலைவர்களும், ஊர்த் தலைவர்களும் கோட்டாட்சியர் பாஸ்கர பாண்டியனுடன் விநாயகர் சிலையை வழிபடச் சென்றிருந்த 20ஆவது நிமிட நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. உண்ணாவிரதம் நடந்த இடத்திற்கு திரும்பிய ஹிந்து இயக்கத் தலைவர்கள் எஸ்.பி.யிடம் "ஏன் தடியடி நடத்தினீர்கள்? கர்ப்பிணிப் பெண்களை ஏன் தாக்கினீர்கள்" என்று வாக்குவாதம் செய்தனர். தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள்மீது ஹிந்துக்கள் போலீசில் புகார் அளித்தனர். இவ்வளவு சம்பவமும் மதியம் 1.30 மணிக்குள் நடந்து முடிந்தது.

தேவையில்லாமல் ஹிந்துக்கள்மீது நடத்திய தடியடிக்கு காரணம் தேடியும், முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்காகவும் காவல்துறை மதியம் 2.15 மணிக்கு மேல் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியது. 3 நாள் தொடர் பந்த் நடத்தியும் எந்த வித வன்முறையிலும் ஈடுபடாமலும் அமைதி காத்த ஹிந்துக்கள்மீது காவல்துறை தனது சுய முகத்தை காட்டத் துவங்கியது. காவல்துறையினர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் தம்மம்பட்டியில் பொதுமக்கள் காவல்துறையினருக்கு எந்த வசதியும் அளிக்க மறுத்துவிட்டனர். மூன்று நாட்களும் கடையடைப்பு நடந்ததால் போலீசாருக்கு தம்மம்பட்டியில் உணவுக்கும் வழியில்லை. 1989 ஆம் ஆண்டு கலவரத்தின்போது முஸ்லிம்கள் ரெட்டியார் மண்டபத்தில் தங்கியிருந்தனர். அப்போது போலீசார் ஹிந்துக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ரெட்டியார் சமூகத்தினர் போலீசாருக்கு மண்டபம் தரமுடியாது எனக் கூறி மண்டபத்தை மூடிவிட்டனர். அதனால் போலீசார் தம்மம்பட்டி உடையார்பாளையம் ஷ்ரீனிவாசா திருமண மண்டபத்தில் தங்கினார்கள். செப்டம்பர் 15-ம் தேதியிலிருந்து போலீசாரின் நடவடிக்கைகளால் வெறுத்துப்போன மண்டப உரிமையாளர் ஊர்மக்களுடன் ஒத்துப்போக வேண்டும் என்று கூறி மண்டபத்தைக் காலி செய்யுமாறு போலீசாரிடம் கூறிவிட்டார். ஆனாலும் காவலுக்கு வந்த பெண் போலீசாருக்கு மட்டும் தங்கள் வீடுகளில் தங்க அனுமதித்தனர்.

இதனால் கோபமடைந்த காவல்துறையினர் ஹிந்துக்களை வேட்டையாடத் தொடங்கினார்கள். செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 89 அப்பாவி ஹிந்துக்களைக் கைது செய்தனர். அதோடு போலீசாரின் வெறி அடங்கவில்லை. கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள். தம்மம்பட்டியில் பல இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அவர்களையெல்லாம் மிரட்டி நாளைக்குள் (செப்டம்பர்18) அனைத்து விநாயகர் சிலைகளையும் எடுத்துவிட வேண்டும் என்று மிரட்டத் தொடங்கினார்கள். போலீசார் தங்கள் கண்ணில் தென்படும் ஹிந்துக்களை எல்லாம் கைது செய்தனர். பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷை ஐ.ஜி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் என்று கூறி அழைத்துச் சென்று நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்த ஹிந்துக்கள் அனைவர் மீதும் 307(கொலை முயற்சி)பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் முஸ்லிம்கள் தரப்பில் கைது செய்யப்பட்ட 30 பேர் மீதும் சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்."கூட்டமாக நின்று மறியல் செய்தனர். கலைந்து செல்லுங்கள் என்று கூறியதும் கலைந்து சென்று விட்டார்கள்" என்று முஸ்லிம்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதே நேரத்தில் 30 ஹிந்துக்கள் மீது `கொன்று விடுவேன் என மிரட்டியது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது' எனக் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் மூன்று நாட்கள் தொடர் பந்த் நடந்தும் தம்மம்பட்டியில் எந்தவித வன்முறை சம்பவங்களும் நிகழவில்லை. இதனைக் காவல்துறையே ஒப்புக் கொண்டுள்ளது. காவல்துறை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த மனுவில், "1000க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும் அதன்மூலம் ரூ.2,000 மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன" என்றும் கூறியுள்ளது. இதன்மூலம் ஹிந்துக்கள்மீது பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டதை காவல்துறையே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.

இவ்வளவு செய்தும் காவல்துறையினருக்கு வெறி அடங்கவில்லை. முஸ்லிம்களைத் திருப்தி படுத்துவதற்காக தொடர் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். செப்டம்பர் 17 ஆம் தேதி இரவு ஹிந்து இயக்கப் பொறுப்பாளர்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார் பெண்களிடம் அநாகரிமாக நடந்துள்ளனர்.அவமானப்படுத்தியுள்ளனர். தேடிவந்த நபர் இல்லாதபோது வீட்டில் இருந்த தந்தை அல்லது தம்பியை அழைத்துச் சென்று 307வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஹிந்துக்களில் 22 நபரை தேடப்படும் நபர்களாக அறிவித்து மொத்தம் 525 பேர் மீது 307வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறையின் இந்த ஹிந்து விரோத நடவடிக்கையின் காரணமாக தம்மம்பட்டி பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

போலீசாரின் இந்த அராஜகத்தை எதிர்த்து ஹிந்துக்கள் போராட ஆயத்தமானார்கள். இதனால் கோவை! மேற்கு மண்டல ஐ.ஜி ராஜேந்திரன் தம்மம்பட்டிக்கு வந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் தம்மம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் ஜகந்நாதன் திடீரென டிரான்ஸ்பர் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தம்மம்பட்டி இன்ஸ்பெக்டர்மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை போலீசார் நடத்திய அராஜகத்தை உறுதிப்படுத்துகிறது. பேச்சுவார்த்தையின் போது `பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட்டு, `நேபாளத்திற்கு போங்கள்' என்று கூறிய வீட்டு வசதி சங்க செயலாளர் ஜாபர் சாதிக் அலிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு பிரச்சினையைப் பெரிதாக்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க) நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ஹிந்துக்கள்மீது தடியடி நடத்திய நாமக்கல் எஸ்.பி.நிக்கல்சன் மீதும் கோட்டாட்சியர் பாஸ்கரபாண்டியன் கூறியவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தம்மம்பட்டி சகஜ நிலைமைக்குத் திரும்பாது என்கிறார்கள் அங்குள்ள ஹிந்துக்கள். ஆனால் ஆளும் கட்சியாக முஸ்லிம்களுக்குச் சாதகமான தி.மு.க அரசு இருப்பதால் காவல் துறையினர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். தமிழக அரசு காவல் துறை, முஸ்லிம்கள் ஆகியவற்றின் சதிகளையெல்லாம் மீறி தம்மம்பட்டியில் அமைதி ஏற்படுமா? தம்மம்பட்டி ஹிந்துக்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா? தம்மம்பட்டியில் போலீசார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடத்திய அட்டூழியங்களைப் பார்க்கும்போது இந்தியா ஒரு ஜனநாயக நாடுதானா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

2 comments:

Anonymous said...

I just didn't cry.... Other than that i felt very bad reading this...All this is happening and that DMK fellows are just ignoring hindus....Only god can save hindus...

Anonymous said...

ஜிஸியா வரியை எப்போது அறிவிப்பார்கள்?