தியாகி வைரப்பனைத் தெரியுமா உங்களுக்கு?
தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உப்புக்கு பெயர் பெற்ற வேதாரண்யத்தில் 1930ல் நடந்த சம்பவம் இது. அப்போது சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. பொதுமக்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களையும் அவர்களது எடுபிடிகளையும் புறக்கணித்து வந்த நேரம் அது. 1930ம் ஆண்டு ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டம் அந்தப் பகுதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. உப்பு காய்ச்ச தடைவிதித்த ஆங்கிலேயே அரசுக்கும், அவர்களது பணியாளர்களுக்கும் உதவிகள் எதுவும் செய்வதில்லை என்று மக்கள் தாங்களுக்குள்ளாகவே ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொண்டனர்.
அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கே.வைரப்பன் என்ற முடி திருத்துபவரிடம் முடி திருத்த வந்தார். கே.வைரப்பன் ஆங்கிலேயர்களுக்கும், அவர்களது பணியாளர்களுக்கும் முடி திருத்துவதில்லை என்று உறுதி பூண்டிருந்தார். முடி திருத்தும் வேலை நடந்து கொண்டிருந்தது. பேச்சுவாக்கில் அவர் ஒரு கான்ஸ்டபிள் என்ற உண்மை, 24 வயதான வைரப்பனுக்குத் தெரிந்தது. பாதி சவரம் செய்த நிலையில் அந்தக் கான்ஸ்டபிளுக்கு சவரம் செய்ய மறுத்து விட்டார். கான்ஸ்டபிள் அச்சுறுத்தியபோதும் வைரப்பனின் தேசபக்தி அசையவில்லை. இதனால் வைரப்பன் கைது செய்யப்பட்டு, 1930ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணை செய்த நீதிபதி வைரப்பனிடம் அந்த போலீஸ்காரருக்கு முழுச்சவரமும் செய்துவிட்டால் மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுவித்து விடுவதாகக் கூறினார். நீதிபதியின் இந்த கூற்றை உறுதியாக மறுத்த வைரப்பன் " உங்களுக்கு மனிதாபிமானம் இருந்தால், இதோ இருக்கிறது கத்தியும் பெட்டியும் நீங்கள் வேண்டுமானால் அவருக்கு சவரம் செய்யுங்கள்" என்று பதிலடி கொடுத்தார். இதைக் கேட்ட நீதிபதி ஆத்திரமடைந்து வைரப்பனுக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்தார். வேலூர், திருச்சி சிறைகளில் இந்த தண்டனையை அவர் அனுபவித்தார். 1906, மே 22ல் பிறந்த வைரப்பன் தனது 90வயதில் 1997 ஆகஸ்டு 15ம் தேதி நாடு தனது சுதந்திர தின பொன்விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் மறைந்தார். இப்படிப்பட்ட தியாகி வைரப்பனுக்கு சங்கம்மாள் என்ற மனைவியும், காந்திமதி என்ற மகளும், சண்முகசுந்தரம், பார்தீபன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
இவரது நினைவாக வேதாரண்யம் - நாகப்பட்டினம் சாலையில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரனின் முயற்சியால் அமைக்கப்பட்ட இந்த நினைவு ஸ்தூபியை 1998ல் ஜி.கே.மூப்பனார் திறந்து வைத்தார்.இப்படிப்பட்ட ஒரு தேசபக்தரின் நூற்றாண்டு விழா பி.வி.ராஜேந்திரன் தலைமையில் கொண்டாப்பட்டுள்ளது. தியாகி வைரப்பன் நினைவு ஸ்தூபியிலிருந்து உப்பு சத்தியாகிரக கட்டிடம் வரை பி.வி.ராஜேந்திரன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக கட்டிடத்தில் நடந்த நூற்றாண்டு விழாவில் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல நிர்வாகி வேதரத்தினம் போன்றவர்கள் கலந்துகொண்டு தியாகி வைரப்பனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். இந்த விழாவில் தியாகி வைரப்பனின் மனைவி மற்றும் மகன்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
காந்தியும் நேருவும் மட்டுமே தேசபக்தர்கள், தியாகிகள் என்று எழுதியும் பேசியும் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகளுக்காக இந்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தியாகி வைரப்பனுக்கு 1998ல் நினைவுச் சின்னம் அமைத்ததோடு அவரது நூற்றாண்டை நினைவில் வைத்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
3 comments:
உங்கள் படம் பார்த்தேன்.
முகமூடி அணிந்த தீவிரவாதி போல் உள்ளது ஆனால், தமிழ் மணம் தீவிரவாதிகள் தேச விரோதிகள் கூடாரம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் உங்களை வைத்துதானோ?
Very usefull news.08/08/07 night8.30 pm same programe was relayed from POdigai TV.Thankyou.
Post a Comment