பல்லாங்குழி
தமிழர்களின் பண்பாட்டில் விளையாட்டுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. பாண்டி, பல்லாங்குழி, நொண்டி, குண்டு விளையாட்டு, பம்பரம் விடுதல், கபடி........ என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். தமிழர்கள் விளையாட்டை ஒருபோதும் விளையாட்டாக விட்டுவிட்டதில்லை. அதனால் தான் முக்கியமான திருமணச் சடங்குகளில் அதற்கு முக்கிய இடத்தை அளித்திருக்கிறார்கள். ஒரு சிறு குடத்தில் நீரை நிரப்பி அதில் மோதிரத்தை போட்டு மணமகன், மணமகளை எடுக்கச் செய்யும் விளையாட்டை தமிழ் சினிமாக்களில் பார்த்திருப்போம். சமீபத்தில் திருச்சிக்கு ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணம் முடிந்ததும் வரும் முதல் சனிக்கிழமை அன்று மணமகள் வீட்டில் ஒரு விருந்து வைக்கிறார்கள். அந்த விருந்திற்கு சனியாறு விருந்து என்று பெயர். சனியாறு விருந்து என்று அழைப்பிதழும் அச்சடித்திருந்தார்கள்.
அந்த சனியாறு விருந்தில் கலந்து கொண்ட நான் அந்த சடங்குகளை கவனித்துக் கொண்டே வந்தேன். ஒரு கட்டத்தில் மணமகளும், மணமகனும் எதிர் எதிரே அவரவர் உறவினர்களுடன் அமர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மத்தியில் பல்லாங்குழி பலகை வைக்கப்பட்டது. இரு தரப்பிலும் ஆயிரம் ருபாய் நோட்டை நடுவர் போன்று இருந்த ஒருவரிடம் பெட் கட்டினார்கள். கடி பாக்கு(இந்த பாக்கிலிருந்துதான் சீவல் தயாரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்)என்ற ஒருவகை பாக்கை கொண்டு பல்லாங்குழி விளையாடினார்கள். இரு தரப்பிலும் ஒரே உற்சாகம். மணமகனுக்கு சகோதரி முறை வரும் இளம் பெண்கள் மணமகனுக்கு சப்போர்ட் செய்ய மணமகளுக்கு சகோதரி முறை வரும் இளம்பெண்கள் மணமகளுக்கு சப்போர்ட் செய்ய அந்த அரங்கமே அல்லோலகப்பட்டது.
1 comment:
பல்லாங்குழி அருமையான விளையாட்டு. சின்ன வயதில் நானும் விளையாடி இருக்கிறேன். விரல்களுக்கு பயிற்சியாக இருப்பதுடன் கணக்கு பயிற்சியாகவும் இருக்கிறது. சோழி, புளியங்கொட்டை இதெல்லாம் பயன்படுத்தி ஆடலாம். இந்த மாதிரி விளையாட்டுகள் பழக்கத்தில் மறைந்து வருவது வருத்தத்திற்குரி யது.
Post a Comment