"வேதனை தரும் அவலம்" - வீ. ரங்கசாமித் தேவர் 31- 03 - 1989 அன்று வெளியிட்ட அறிக்கை
23-03-1989 அன்று தம்மம்பட்டியில் ஹிந்துக்கள்மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி நடந்த சம்பவங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்தான் காரணம் என்று அவதூறுகளை அள்ளி விட்டிருந்தார். கருணாநிதியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து அப்போதைய ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் வீ.ரங்கசாமித் தேவர் வெளியிட்ட அறிக்கையை 7-4-1989 விஜயபாரதம் இதழ் பதிவு செய்துள்ளது. அவற்றின் சுருக்கம்.
"மசூதி முன்பு இசை எழுப்புவது மரபுக்கு விரோதம் என்கிறார் முதல்வர் கருணாநிதி. இந்த மரபு தொடங்கியது எப்போது என்பதை அவர் ஆராய்ந்து பார்க்கட்டும். அன்னிய அடக்குமுறை ஆட்சியில் ஹிந்துக்கள் மீது திணிக்கப்பட்ட பழக்கம்தான் இது. இப்படிப்பட்ட ஒரு அவமானகரமான பழக்கத்தை அற்புதமான மரபு என்று கொண்டாடுவது ஹிந்துக்களின் உணர்வுகளைக் குத்திப் புண்ணாக்கும் செயல். அதுவும் ஹிந்துக்கள் தங்கள் சுதந்திர நாட்டிலேயே இப்படி அவமதிக்கப்படுவதா?
"அன்னிய அடிமைத்தனத்தின் இத்தகைய மிச்ச சொச்சங்களை ஆர்.எஸ்.எஸ் கடுமையாக எதிர்க்கிறது. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க தளர்வற்ற போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ் துவக்கி உள்ளது. அத்துடன் ஹிந்துக்கள் தங்கள் சொந்த நாட்டில் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பணியினையும் ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது. நாங்கள் மேற்கண்ட நிலை சரியானது என்பது தம்மம்பட்டி உள்பட பல ஊர்களில் நிரூபணமாகி உள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
"உள்ளது உள்ளபடி அனைவரும் உணரும் வகையில் கீழ்க்கம்ட விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். தம்மம்பட்டியில் நடந்தது பாரம்பரிய ஹிந்து சமயத் திருவிழா. இதுபோல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் நடப்பது சகஜம். இந்தத் திருவிழா முதலமைச்சர் வர்ணித்ததுபோல ஆர்.எஸ்.எஸ் நடத்திய நிகழ்ச்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ் பெயரை இதில் அவர் இழுத்தது அனாவசியமானது. ஆர்.எஸ்.எஸ்ஸை தூற்றுவதையே தொழிலாகக் கொண்ட முஸ்லிம் லீக், இடது கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் தந்த தகவல்களை ஆதாரமாக எடுத்துக் கொள்வது தீய அறிகுறி.
"அமைதியான முறையில் ஊர்வலமாகச் செல்லும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் பொறுப்பு. அவ்வூர் மசூதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஏராளமான முஸ்லிம்கள் மிரட்டும் போக்கில் திரண்டதாக கூறப்படுகிறது. அவர்களை காவல்துறை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை செய்யத் தவறிய காவல்துறை பரிதாபத்துக்குரியதாகிறது.
"துப்பாக்கிச் சூடு நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹிந்துக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட எடுத்த ஆணித்தரமான நடவடிக்கைகளுக்கு பிறகு முஸ்லிம்கள் இறங்கி வந்தனர். இனி எந்த நாளிலும் எந்த நேரத்திலும் வாத்திய இசையுடன் மசூதிக்கு முன்னால் ஹிந்துக்கள் ஊர்வலமாகச் செல்வதை எதிர்க்கும் அறிவீனத்தை கைவிடப்போவதாக அறிவித்திருப்பது சுவாரஸ்யமானது. சுதந்திர பாரதத்தில் ஹிந்துக்கள் தங்களுடைய நியாயமான உரிமைகளை நிலை நாட்டுவதற்காக இரண்டு பேரின் இன்னுயிரை பலி கொடுக்க வேண்டியிருக்கிறது. இது வேதனை தரும் அவலம்"
No comments:
Post a Comment