October 27, 2007

தென்னிந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி : முதலா? கடைசியா?

கர்நாடக அரசியலில் மீண்டும் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் (குமாரசாமி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர்) டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்தித்து பேசியதும் தேவகவுடாவுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது. பிரகாஷ் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராகிவிட்டால் தான் கர்நாடகத்தில் செல்லாக்காசாகி விடுவோம் என்ற பயத்தில் இப்போது பா.ஜ.கவிடம் அடைக்கலமாகி இருக்கிறார் துரோகத்திற்து பெயர் பெற்ற தேவகவுடா.

பா.ஜ.க ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் கொடுத்து கவர்னர் மாளிகைக்கு வெளியே போஸ் கொடுக்கும் குமாரசாமி



குமாரசாமி ஒப்பந்தப்படி அக்டோபர் 3-ம் தேதி பா.ஜ.கவிடம் ஆட்சியை ஓப்படைத்திருக்க வேண்டும். ஆனால் எப்படியாவது காங்கிரஸ் தயவில் ஆட்சியைத் தெடரலாம் என்ற நப்பாசையில் ஆட்சியை ஒப்படைக்க மறுத்து விட்டார். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே தேவகவுடாவின் துரோக அரசியலால் பாதிக்கப்பட்ட அனுவபம் இருந்ததால் குமாரசாமிக்கு கைகொடுக்கவில்லை. பா.ஜ.கவிடம் ஆட்சியை ஒப்படைக்காததால் குமாரசாமியின் இமேஜ் சரிந்து துரோகத்திற்கு ஓர் உதாரணமாய் அவர் சரித்திரத்தில் இடம்பெற்றார். இதனால் பா.ஜ.கவின் செல்வாக்கு உயர்ந்தது. கர்நாடக அரசியல் பல ஆண்டுகளாகவே ஜாதி அரசியலாக மாறிப்போனது. லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராவதை தடுத்தவிட்டார் என்பதால் லிங்காயத்து மக்கள் தேவகவுடாவையும். குமாரசாமியையும் துரோகியைப்போல பார்க்க ஆரம்பித்தனர். இதனால் லிங்காயத்து சமூகமே பா.ஜ.க பக்கம் திரும்பியது.

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னரிடம் கோரிக்கை விடுத்து திரும்பும் பா.ஜ.க தலைவர்கள்

தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு பிரதமரிடம் முறையிட்டுவிட்டு திரும்பும் பா.ஜ.க தலைவர்கள்.(31-10-2007)

இப்போது எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது. தன் கட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக தேவகவுடாவும், குமாரசாமியும் நடத்தும் நாடகத்திற்கு பா.ஜ.க உடன்பட்டதன் மூலம் பா.ஜ.க தனக்கிருந்த மரியாதையை இழக்கப்போகிறது. எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்தால் தென்னகத்தில் முதன்முதலாக ஆட்சியை பிடித்த பெருமை பா.ஜ.கவுக்கு கிடைக்கும். தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதல்வர் என்ற பெருமை எடியூரப்பாவுக்கு கிடைக்கும். ஆனால் இந்த முதல் பெருமையே இறுதியான பெருமையாக இருந்து விடக்கூடாதே.


வேறுவழியில்லாமல் போனபிறகு ஆதரவு கொடுக்க முன்வந்த தேவுகவுடா மற்றும் குமாரசாமியின் ஆதரவை பா.ஜ.க ஏற்றிருக்க கூடாது. அப்படி ஏற்க மறுத்திருந்தால் தேர்தல் வந்திருக்கும். தேர்தலில் பா.ஜ.க தனித்து ஆட்சியை பிடித்திருக்கும். ஆனால் முன்பு ஒரு முறை எடியூரப்பா பா.ஜ.கவை உடைத்துக் கொண்டு வெளியேற தயாராக இருந்ததை மறந்துவிட முடியாது. பா.ஜ.க மேலிடம் ஒருவேளை தேவகவுடாவின் ஆதரவை நிராகரித்திருந்தால் எடியூரப்பா தனி ஆவர்த்தனம் பாடியிருந்தாலும் பாடியிருப்பார். தேவகவுடாவின் ஆதரவோடு ஆட்சி அமைவது எடியூரப்பாவுக்கு நல்லது. பா.ஜ.கவுக்கு நல்லதல்ல. இதனால் பா.ஜகவின் எதிர்காலம் நிச்சயம் பாதிக்கப்படும்.

1 comment:

Anonymous said...

சரவணன்,

நான் வேறுபடுகிறேன்.

ஒரு கட்சி அரசாளும் நிலைக்குவர ஒரு குறிப்பிட்ட தனி மனிதர் முன்னிருத்தப்பட்டு, அவர் உழைப்பினாலும் புத்திசாலித்தனத்தாலும் அக்கட்சி வலிமை பெறுகிறது. அதற்கு பிரதிபலனாக அம்மனிதர் ஒரு பதவியை எதிர்பார்ப்பதும் தவறு இல்லை. இந்தியாவில் இத்தகைய போக்கை ஆதரிக்கிற கட்சிகள்தான் இதுவரை தேசிய அளவில் வெற்றிபெற முடிந்திருக்கிறது. இந்த நிலையை எடுக்காத எந்த கட்சியும் வெற்றிபெற முடிந்ததில்லை.


அது காங்கிரஸாக இருக்கட்டும், பாஜாகாவாக இருக்கட்டும், அல்லது கம்யூனிஸ்ட்டுகளாகவே இருக்கட்டும்.

எட்டியூரப்பாவின் வளர்ச்சி பாஜாகவிற்கு துணை. அதுவே அதன் பலகீனமும்.


எட்டியூரப்பா எந்த அளவு கட்சி மேலிடத்திற்குக் கட்டுப்பட்டவராக இருக்கப்போகிறார் என்பதைவைத்துத்தான் பாஜாகாவின் எதிர்காலமும்.

கம்யூனிஸ பொலிட் ப்யூரோ நியமனத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் கேரளாவில் ஊர்வலம் போனார்கள்.

அந்த நிலைக்கு கர்னாடக பாஜக தன்னை தள்ளிக்கொள்ளக்கூடாது.

இந்தியாவில் தனி மனித கவர்ச்சியே வெற்றிபெற்று வருகிறது. எம்ஜியார், என் டி ஆர், கருணாநிதி, நம்பூதிரிபாட், இந்திராகாந்தி, மோடி, சோனியா காந்தி.......

சொல்லிக்கொண்டே போகலாம்.