தம்மம்பட்டி போலீஸ் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட சிலரின் அதிர்ச்சி வாக்குமூலங்கள்!
தம்மம்பட்டியில் நாமக்கல் எஸ்.பி ஜான் நிக்கல்சன் உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தடியடிக்கு பிறகு போலீசார் 500க்கும் அதிகமான பொதுமக்கள் மீது சட்டப் பிரிவு 307(கொலை முயற்சி) உள்ளிட்ட பல பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் 150க்கும் அதிகமானவர்களை இரவோடு இரவாக கைது செய்தனர். இவர்களை சமீபத்தில் நாங்கள் சந்தித்தோம். போலீசாரால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் இந்தச் சம்பவத்திற்கு துளியும் சம்மந்தம் இல்லாதவர்கள். என்ன நடந்தது என்பதை இதுவரைகூட அறிய முடியாத அப்பாவிகள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
தம்மம்படடியைச் சேர்ந்த பலர் ஆத்தூரில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வருகின்றனர். எந்தத் தவறும் செய்யாத அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த தம்மம்பட்டிக்கு செல்ல முடியாமல் 15 கி.மீ தொலைவில் உள்ள ஆத்தூரில் தங்கியிருக்கின்றனர். இவர்களில் பலர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவபர்கள். மாணவர்களைக்கூட போலீசார் விட்டுவைக்கவில்லை. இரண்டு பிளஸ்-டூ மாணவர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.
இதோ அவர்களில் சிலரின் வாக்குமூலங்கள். கேட்கும்போதே அதிர்ச்சியை வரவழைக்கிறது.
வி.பாலாஜி, தனியார் நிறுவன ஊழியர்
நான் என்ன பாவம் செய்தேன்?
"எனது சொந்த ஊர் தம்மம்பட்டி. புதுச்சேரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஓர் ஆண்டாக நான் தம்மம்பட்டிக்கு வரவே இல்லை. விநாயகர் சதுர்த்தி சம்பவங்கள் தொடர்பாக அங்கே பிரச்சினைகள் நடந்தபோதும் நான் தம்மம்பட்டியில் இல்லை. ஆனால் என் மீது 307 உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் இப்போது நான் ஆயிரக்கணக்கில் செலவு செய்து முன் ஜாமீன் பெற்றுள்ளேன். வேலைக்கும் செல்ல முடியவில்லை. நான் என்ன பாவம் செய்தேன். என்னை ஏன் இப்படி வதைக்கிறார்கள்?"
சி.துரை, வைத்தியர்
இப்படி கூட கொடுமை நடக்குங்களா?
"நான் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டியைச் சேர்ந்தவன். அங்கு `கிருஷ்ணா எலும்பு முறிவு வைத்திய சாலை' என்ற பெயரில் எலும்பு முறிவு வைத்தியசாலை வைத்துள்ளேன். 17-09-2007 தம்மம்பட்டிக்கு எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்க வந்தபோது என்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். எதற்காக கைது செய்கிறார்கள் என்பது கூட தெரியாமல் வீட்டிற்குகூட தகவல் சொல்ல முடியாமல் நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே. ஆண்டவா இது போன்ற துயரத்தை யாருக்கும் கொடுத்து விடாதே. இப்போதுகூட நான் வீட்டிற்கு செல்ல முடியாமல் ஆத்தூரில் தங்கி போலீஸ் ஸ்டேசனில் தினமும் கையெழுத்திட்டு வருகிறேன். இப்படி கூட கொடுமை நடக்குங்களா?"
ஜி.ஜெயக்குமார், காய்கறி வியபாரி
நான் யார கொல செஞ்சேன்?
"ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டிதான் எனது சொந்த ஊர். விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து காய்கறி பயிரிட்டு வருகிறேன். சம்பவத்தன்று தக்காளி விற்பதற்காக சைக்கிளில் தம்மம்பட்டி வந்தபோது போலீசார் என்னையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள். என்ன ஏது விசாரிக்ககூட அனுமதிக்க வில்லை. ஏருடா நாயே என்று ஆபாசமாத திட்டினார்கள். இப்போ என் மீது கொல கேசு என்கிறார்கள். நான் யார கொல செஞ்சேன்? என் மீது எதுக்கு கேசு. என்ன அநியாயம் சார்?"
பி.முனியப்பன், கட்டட மேஸ்திரி
என்ன நடக்குது இங்கே?
"நான் கட்ட மேஸ்திரி. செப்.17ந் தேதி கட்டடம் கட்டும் வேலைக்காக வந்தபோது என்னையும் கைது செய்து விட்டார்கள். என்ன நடந்தது என்பது இதுவரைக்கும் எனக்கு புரியவில்லை. இப்போ எனக்கு வருமானமும் இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்படறோம்."
விஸ்வநாதன், 76 வயது முதியவர்.
நாம சனநாயக நாட்லதான் இருக்கோமா சார்?
தம்மம்பட்டி கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்கு எதிரே கடந்த 5 ஆண்டுகளாக விநாயகர் சிலை வைத்து வரும் நாகராஜனின் தந்தை விஸ்வநாதனுக்கு 76 வயதாகி விட்டது. நடப்பதே கடினம். அவரையும் போலீஸ் விட்டுவைக்கவில்லை. நாகராஜனுக்கு நவம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாகராஜன் மசூதிக்கு எதிரே ஸ்டேஷனரி கடை வைத்துள்ளார். இவரது கடையில் முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று மசூதி ஒலி பெருக்கியில் அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"எனக்கு 76 வயசாகுது. மூட்டு வலி. நடக்கறதே கஷ்டம். 17ந் தேதி வீட்டில் இருந்த போது என் மகன் நாகராஜனை விசாரிச்சுகிட்டு சில போலீஸ்காரங்க வந்தாங்க. அவன் வீட்ல இல்ல கல்யான வேலையை போயிருக்கான்னு சொன்னேன். அப்ப நீ வாடான்னு சொல்லி என்னை இழுத்துகிட்டு போயி போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள். அப்புறம்தான் என்னை கைது செஞ்சுட்டதா சொன்னாங்க. என் மவன் நாகராஜனுக்கு வர்ற மாசம் கல்யாணம். ஆனா நான் ஊருக்குள் நுழையக் கூடாதாம். இப்போ ஆத்தூரில் தங்கிட்டு தினமும் கையெழுத்து போட்டு வர்றேன். நடக்கவே முடியாத என் மேல கொல கேசு. நாம சனநாயக நாட்லதான் இருக்கோமா சார்?"
சி.சுகுமார், சி.சுரேஷ், சலவைத் தொழிலாளி எஸ்.சின்னையாவின் மகன்கள்
என்னடி உன் பையன்களுக்கு ரெண்டு ........ இருக்கா?
" எங்கப்பா சலவைத் தொழில் செய்யறார். எங்களுக்கும் அந்த வேலதான். தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்ல ஏட்டா இருக்கற அப்துல் கரீம் எங்கட்டதான் துணி வெளுக்க கொடுப்பாரு. ஆனா காசு கொடுக்க மாட்டாரு. கேட்டா ஏண்டா என்கிட்டயே காசு கேட்கிறியான்னு திட்டுவாரு. அதனால எங்கப்பா பயந்துட்டு கேட்க மாட்டாரு. ஆனா நாங்க ரெண்டு பேரும் கேட்போம். 17ம் தேதி அப்துல் துணி வாங்க வந்தாரு. காசு கேட்டோம். என்னடா கொழுப்பா? எங்கிட்டேயே காசு கேட்கிறீங்களா? உங்கள ஒரு கை பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு போயிட்டார்.
அதன் பிறகு எங்க வீட்டுக்கு போலீஸ் வந்து எங்க ரெண்டு பேரையும் கேட்டுருங்காங்க. நாங்க இல்லைன்னதும் எங்கப்பாவை கூட்டிட்டுப்போய் உள்ள தள்ளிட்டாங்க. இப்போ எங்க மேலயும் கொல கேசு போட்டிருங்காங்க. இப்ப நாங்க வேலையும் செய்ய முடியல. தம்மம்மட்டி போலீஸ் ஸ்டேஷன்ல ஏட்ட இருக்கிற சுந்தரமும், அப்துல் கரீமும் எங்க வீட்ல போயி எங்கம்மா கிட்ட என்னடி உன் பையன்களுக்கு ரெண்டு ........ இருக்கான்னு ஆபாசமா பேசியிருக்காங்க. நாங்க வீட்டுக்கு போன் பண்ணுனா அம்மா இத சொல்லி அழறாங்க சார்?"
ஷ்ரீராம், புரோகிதர்
எஸ்.பியே கொன்னுடுவேன்னு மிரட்டினா நாங்க என்ன பண்ண முடியும் சார்?
"நாங்க தம்மம்பட்டியில புரோகிதம் செஞ்சுட்டு வர்றோம். நாமக்கல் எஸ்.பி நிக்கல்சனும். சேலம் எஸ்.பி பாஸ்கரும் என்ன கூப்பிட்டு விநாயகர் சிலைக்கு பூஜை செய்ய சொன்னார். ஊர் கட்டுப்பாடு சார் பண்ண முடியாதுன்னு சொன்னேன். ஒழுங்கா பூஜ பண்ணு. இல்லைன்னா என்கவுன்டர்ல போட்டுருவேன்னு மிரட்டினார். "விநாயகர் சிலை வைத்தவர்கள் எல்லாம் தலைமறைவாகி விட்டார்கள். எனவே தம்மம்பட்டி கடை வீதியில் இருக்கும் நாங்கள் முறைப்படி பூஜைகள் செய்து விசர்ஜனம் செய்தோம்" அப்படின்னு எழுதி கையெழுத்து வாங்கிட்டார். எஸ்.பியே கொன்னுடுவேன்னு மிரட்டினா நாங்க என்ன பண்ண முடியும் சார்?"
ஆர். பூபாலசுந்தர், பூஜாரி
ஏறுடா நாயே?
"எங்கப்பா கந்தையா 13 வருஷமா தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற விநாயகர் கோயில்ல பூஜ பண்ணிகிட்டு வர்றார். நானும் பூஜை செய்வேன். ஆவணி கடைசில அந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடக்க இருந்தது. அதுக்கு பொருட்கள் வாங்க நான் கட வீதிக்கு வந்தப்போ என்னையும் புடிச்சு உள்ள தள்ளிட்டாங்க. அய்யா நான் போலீஸ் ஸ்டேஷன் கோயில் பூஜாரின்னு சொல்லியும் கேட்காமா வாயா மூடுடா நாயேன்னு சொல்லி என் மேலயும் கொல கேசு போட்டுட்டாங்க சார்"
அசோக்குமார், மளிகைக் கடைக்காரர்
500ல் ஒருவனாக வேண்டுமா?
நாங்கள் தனம் மளிகை என்ற பெயரில் தம்மம்ப்ங்டடியில் மளிகை கடை நடத்துகிறோம். ஏட்டு அப்துல் கரீம் எங்கள் கடையில் ரூ 20,000க்கும் அதிகமாக மளிகை சாமான்கள் வாங்கினார். ஆனால் பணம் கொடுக்கவில்லை. பணம் கேட்டபோது 500ல் ஒருவனாக வேண்டுமா? என மிரட்டினார்.(போலீசார் 500 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர்) அதன் பிறகு காலைக் கதிர் நாளிதழில் மளிகை கடைக்கு பணம் தராமல் போலீசார் மிரட்டுவது பற்றி செய்தி வந்தது. நீ தான் செய்தி கொடுத்தாயா? என்ற எல்லா கடைக்காரர்களையும் மிரட்டி வருகின்றனர்.
சண்முகம், வீடியோ கடை உரிமையாளர்
எஸ்.பியே வரம்பு மீறி நடக்கலாமா?
நான் தம்மம்பட்டியில் வீடியோ கடை வைத்துள்ளேன். தம்மம்பட்டியில் செப்டம்பர் 15 முதல் 17ம் தேதி நடந்த எல்லாவற்றையும் என் வீடியோ கேமராவில் பதிவு செய்து வந்தேன். ஊர் பெரியவர்கள் எல்லாவற்றையும் ரெக்கார்டு பண்ண சொன்னதால் நான் என் தொழிலை செய்தேன். இதில் போலீசாரின் அராஜகங்கள் முழுக்க பதிவாகி இருந்தது. 17ம் தேதி நாமக்கல் எஸ்.பி ஜான் நிக்கசல்சன் என்னிடம் வீடியோ கேசட்டை கொடு ஒரு காப்பி போட்டுவிட்டு தருகிறேன் என்றார். சார் என்னிடம் கம்ப்பியூட்டர் உள்ளது. உங்களுக்கு நானே ஒரு காப்பி தருகிறேன் என்றேன். இல்லை நான் போட்டுக் கொள்கிறேன். கேசட்டைக் கொடு என்று ஊனமுற்றவனான என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக கேசட்டை பறித்துக் கொண்டார். ஒரு எஸ்.பியே வரம்பு மீறி நடக்கலாமா?
அப்பாவி இளைஞர்களை அடித்து துவைத்த போலீசார்
ஒரு மாதத்திற்கு பிறகும் வடியாமல் இருக்கும் வீக்கத்தை காட்டுகிறார் கே.ஜீவானந்தம்
போலீசாரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட கே. ஜீவானந்தம் மற்றும் கே.என்.சரவணன்
போலீசார் பல எதற்காக எங்களை கைது செய்தீர்கள் என்று கேட்ட பல இளைஞர்களை அடித்து துவைத்திருக்கிறார்கள். நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை ஆத்தூரில் சந்தித்து உரையாடியபோது மீன் கடை வைத்திருக்கும் கே. ஜீவானந்தம், டிரைவராக இருக்கும் கே.என். சண்முகம் ஆகியோர் போலீசார் தாக்கி ஒரு மாதத்திற்கு பிறகும் மறையாமல் இருக்கும் தடித்து வீங்கியிருக்கும் பகுதியை காட்டினார்கள். இத்தனைக்கும் இவர்களுக்கு அன்று என்ன நடந்தது என்பதே தெரியாது. தான் உண்டு வேலை உண்டு இருந்தவர்களுக்கு தான் இந்த கதி. போலீசாரின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு சிறந்த உதாரணம் தம்மம்பட்டி. ஆனால் இதற்கு எந்த மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இந்துக்கள் பாதிக்கப்பட்டால் அது மனித உரிமை இல்லை என்று தீர்மானம் போட்டு விட்டார்களா?
No comments:
Post a Comment