ஜெயலலிதா - சு.சுவாமி சந்திப்பு : தமிழக அரசியலில் மாற்றம் வருமா?
சுப்பிரமணியசுவாமி இந்திய அரசியலில் நீண்ட காலமாக ஒரு அதிர்வை ஏற்படுத்தி வருபவர். அவர் சொல்லும் பல விஷயங்கள் நம்ப முடியாதவையாக இருக்கும். கடந்த 2006 மார்ச்சில் ஈரோட்டில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாடு நடந்தபோது அதற்கு சு.சுவாமி வந்திருந்தார். அவர் தங்கியிருந்த வீட்டில் விஜயபாரதத்திற்காக அவரைச் சந்தித்தேன். அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் ஷ்ரீகுருஜி கோல்வல்கரின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்த மாநாடு நடக்கிறது. உங்களுக்கு ஷ்ரீகுருஜி கோல்வல்கர் பற்றி ஏதாவது தெரியுமா? என்று கேட்டேன். என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? நானும் ஷ்ரீகுருஜி கோல்வல்கரும் நெருங்கிய நண்பர்கள். அவர் டில்லி வரும்போதெல்லாம் என்னை அழைப்பார். அவருடன்தான் நான் தேநீர் அருந்துவேன் என்றார். இது நடந்தது எந்த வருடத்தில் என்றேன். 1973 என்றார். ஷ்ரீகுருஜி 1973ல் இறந்தார். ஆனால் அந்த வருடம் அவர் டில்லியில் இருந்த நாட்கள் குறைவுதான். சிகிச்சைக்காக அவர் மும்பை மற்றும் நாக்பூரில்தான் இருந்தார். சு.சுவாமி ஷ்ரீகுருஜியை சந்தித்து இருக்கலாம். ஆனால் ஷ்ரீகுருஜியும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் இப்படிகூட பேசாவிட்டால் சு.சுவாமிக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமே.
1996ல் தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடித்ததற்கு சு.சுவாமி ஜெயலலிதா மீது தொடர்ந்த வழக்குகள் ஒரு காரணம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அடுத்த ஆண்டே அவர் ஜெயலலிதாவுடன் இணைந்து மதுரையில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு ஜெயலலிதா மத்திய அமைச்சர் பதவி கேட்க பா.ஜ.க(வாஜ்பாய்) கொடுக்க மறுக்க... ஜெ. தனது சுயத்தை பா.ஜ.கவுக்கு புரிய வைத்த தருணங்கள அவை. அதன்பிறகு சோனியா, ஜெயலலிதா கலந்து கொண்ட ஒரு டீ பார்ட்டி நடத்தி வாஜ்பாய் ஆட்சியை முடிவுக்கு கொண்டு ஜெயலலிதாவுக்கே ஆப்பு சீவியர் சு.சுவாமி. ஜெ.வும் அதை புரிந்து கொண்டார். அதனால்தான் இதுவரை அவர் சு.சுவாமியை அண்ட விடவில்லை. அதன்பிறகு பா.ஜ.க ஆட்சியில் இருந்தவரை சு.சுவாமி பா.ஜ.க எதிர்ப்பு அணியில்தான் இருந்தார். 2004 தீபாவளி இரவு ஜெ. காஞ்சி சங்கராச்சாயாரை கைது செய்ததும் சு.சுவாமி விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார். அதன்பிறகு வி.ஹி.பரிஷத் மேடைகளில் சு.சுவாமி தவிர்க்க முடியாத ஓர் நபராகிப்போனார்.
வி.ஹி.பரிஷத் ராமர் பாலம் விவகாரத்தை கையெடுத்ததும் சு.சுவாமி அதற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஓர் வழக்கைத் தொடுத்து தன் பங்கை ஆற்றத் தொடங்கினார். இந்நிலையில் சு.சுவாமி நேற்று(22-10-2007) போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்துள்ளார். அதே நாளில் ஜெ.வைச் சந்தித்த மற்றொரு பிரபலம் வை.கோ. சு.சுவாமி - ஜெ. சந்திப்பு தமிழக அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா? 21-10-2207 தூத்துக்குடியில் ஓரு நிகழ்ச்சியில் பேசிய வருங்கால மத்திய அமைச்சர் கனிமொழி சு.சுவாமி, சோ, ஜெ. ஞாநி ஆகியோர் ஒரு அணியில் திரண்டு விட்டார்கள் என்று பேசியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. மந்திரி பதவி என்ற கற்பக விருட்சத்தை கருணாநிதியாலும், ராமதாசாலும் ஒருபோதும் துறக்க முடியாது. இவர்கள் பதவிக்காக எதையும் துறக்க தயாராக இருப்பதால் சு.சுவாமி - ஜெயலலிதா சந்திப்பு தமிழக அரசியலில் மாற்றம் எதையும் ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன். தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டுமானால் இரண்டு விஷயங்களில் ஒன்றாவது நடக்க வேண்டும். ஒன்று மத்திய அரசியலில் மாற்றம் வர வேண்டும். மற்றொன்று உங்களுக்கே தெரியும்.
No comments:
Post a Comment