October 23, 2007

ஞானிக்கு எதிரான கண்டனக் கூட்டம்

நேற்று மாலை(20-10-2007) நான் வாணி மஹாலில் பத்திரிகையாளர் ஞாநி எழுதிய `விருப்பப்படி இருக்க விடுங்கள்' என்ற கட்டுரைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த கண்டனக் கூட்டத்தில் பங்கேற்றேன் . ஆனந்த விகடனில் ஞாநி எழுதிய இந்தக் கட்டுரை பற்றி
ஏற்கனவே மிகப்பெரிய விவாதமே நடந்து முடிந்து விட்டது. அந்த விவாதத்தை படித்த ஆர்வமே என்னவோ எனக்கு அந்த நிகழச்சிக்கு செல்லும் ஆர்வம் ஏற்பட்டது. அழைப்பிதழில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று இருந்ததால் நான் மாலை 5.45 மணிக்கு வாணி மஹாலுக்கு சென்று விட்டேன். ஆனால் கூட்டம் திராவிடக் கலாச்சாரத்தை காப்பாற்றும் பொருட்டு தாமதமாக மாலை 6.40க்கு தான் துவங்கியது.


மேடையில்பேச வந்திருந்த பிரபலங்களைவிட பார்வையாளர்களில் வரிசையில் அமர்ந்திருந்த பிரபலங்களின் எண்ணிக்கை அதிகம். இந்தக் கூட்டம் ` தீம்புனல்' என்ற எழுத்தாளர்கள் அமைப்பின் சார்பில் நடப்பதாக அழைப்பிதழில் இருந்தது. மேடையின் பின்னே வைக்கப்பட்டிருந்த திரையிலும் தீம்புனல் என்ற பெயர் இருந்தது.( கம்யூனிஸ்டுகள் எத்தனை அமைப்புகள் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை). வாணி மஹாலின் முகப்பில் கம்யூனிஸ்டுகள் கடை பரப்பி இருந்தார்கள். தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கச்சி கவிஞர் தமிழச்சி, இரண்டாம் ஜாமங்களின் நாயகி கவிஞர் சல்மா , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ரவிக்குமார், பேராசிரியர் வீ.அரசு , பத்திரிகையாளர், ஏ.எஸ் . பன்னீர்செ்லவம், கவிஞர் கரிகாலன், எழுத்தாளர் இமயம், கவிஞர் அறிவுமதி, ஏ.எஸ்.எஸ் மணி இவர்களைத் தவிர வழக்கம்போல மார்க்ஸ், மகேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

மேடைக்குகீழே கலைஞரின் செல்ல மகள் கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு , டாக்டர் பூங்கோதை, திரைப்பட இயக்குனர் சீமான், நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ், கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி , மாஃபா பாண்டியராஜனின் மனைவி லதா ராஜன், தொலைக்காட்சிகளில் அடிக்கடி முகம் காட்டும் பர்வீன் சுல்தானா, சென்னை தூர்தர்ஷனின் செய்தி ஆசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன்... என பல பிரபலங்கள் அமர்ந்திருந்தனர்.

மாஃபாபாண்டியராஜனின் மனைவி லதா பாண்டியராஜனும் கனிமொழியும் காட்டிய நெருக்கத்தை பத்திரிகை புகைப்படக்காரர்கள் சுட்டுத் தள்ளினார்கள். கேமரா கண்கள் பட்டதும் அவர்களின் கொஞ்சல் அதிகமாகிப்போனது. அமைச்சர் டாக்டர் பூங்கோதையும் அந்த கொஞ்சலில் இணைந்து கொண்டார்.

நான்கவிஞர் சல்மா பேசிக் கொண்டிருக்கும்போதே நான் எழுந்து வந்து விட்டேன். அதன் பிறகு ஏ.எஸ் .பன்னீர்செல்வம், மகேந்திரன் பேசியிருப்பார்கள் . தான் கவிஞர் என்பதை நினைவு படுத்துவதற்காகவோ என்னவோ தமிழச்சி நன்னூலில் இருந்து சில வரிகளைப் படித்தார். அவ்வப்போது சில ஆங்கில வரிகளையும் உச்சரித்தார்( அப்போதுதான் அறிவு ஜீவி என்று ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்தாரோ என்னவோ)
விடுதலை சிறுத்தைகளின் தமிழ் மண் பத்திரிகையில் `பார்ப்பன வாத்தியார்கள்' என்ற கட்டுரை எழுதிய கவிஞர் அறிவுமதி பேச்சை நிறுத்துங்கள் என்ற துண்டு சீட்டு கொடுத்தும் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். அவரது பார்ப்பன வாத்தியார்கள் கட்டுரை நம் சிந்தனை குழுமத்திலும் விவாதிக்கப்பட்டது நினைவிருக்கும். தனது இந்த கட்டுரை இணையத்தில் பெரிய தாக்கத்தை எற்படுத்தி இருப்பதாக அறிவுமதி பெருமிதப்பட்டுக்கொண்டார். அந்தக் கட்டுரைக்கு வந்த ஆதரவான பதில்களை எல்லாம் அவர் ஒரு புக்லெட்டாக தயாரித்து எடுத்து வந்திருந்தது ஒரு சுவாரஷ்யம். இனி எங்களுக்கு கவலை இல்லை. பெரியாரின் பிள்ளைகள் இணையத்திலும் போர் தொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஞாநி போன்ற பாப்பான்களுக்கு சவால் விட ஆரம்பித்து விட்டார்கள். அறிவை அறிவால் வெல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்று பேசிக் கொண்டே இருந்தார்.

பெரியார்பிராமணர்களை எதிர்த்ததால் அவர்கள் மயிலாப்பூர், மாம்பலம் என்று குடியேறி விட்டார்கள். இன்று பிராமணர்கள் நகரங்களில் வசதியான வாழ்க்கை வாழ்வதற்கு பெரியார்தான் காரணம் என்று ஒரு அரிய கண்டுபிடிப்பையு்ம அவர் வெளியிட்டார்.
மார்க்ஸ்பேசும்போது பெரியார் பெண் பித்தர் என்று காலச்சுவடு பத்திரிகையில் கட்டுரை எழுதினார்கள் என்று மேடையில் இருந்த எம்.எல்.ஏ ரவிக்குமாரை குறிவைத்து பேசினார்.( பெரியார் பெண்களுக்கு எதிரி என்று காலச்சுவட்டிலும், தமிழ் மண்ணிலும் கட்டுரை எழுதியவர் ரவிக்குமார் தான்) காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருப்பவர்களில் மூன்று பேர் இங்கே இருக்கிறார்கள் . அவர்கள் ஏன் இதனை எதிர்க்கவில்லை.( கனிமொழி, சல்மா, ரவிக்குமார் ஆகியோர்தான் அந்த மூவர் ) ஞாநிக்குள் ஒளிந்திருக்கும் சோவை 6 ஆண்டுகளுக்கு முன்பே தான் கண்டுபிடித்து விட்டதாக அவர் அறிவிக்க சிலர் கைதட்டினார்கள்.


ஒருபத்திரிகையாளர் எழுதிய கட்டுரைக்கு மாநிலத்தில் உள்ள பிரபலங்கள் எல்லாம்கூடி ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்துவதுவதைவிட அந்த எழுத்தாளருக்கு பெரிய அங்கீகாரத்தை யாரும் கொடுத்துவிட முடியாது . அந்த வகையில் ஞாநி கொடுத்து வைத்தவர். கூட்டத்தில் பேசியவர்களில் கவிஞர் தமிழச்சி மட்டுமே நரேந்திர மோடியின் பெயரை உச்சரித்தார். இப்போதெல்லாம் மோடியின் பெயரை உச்சரிக்கமால் நம் நாட்டில் எந்தக்க கூட்டமும் நடப்பதில்லை . இங்கு அந்தக் குறையை போக்கிய தமிழச்சிக்கு நாம் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம் . இந்தக் கூட்டத்திற்கு சென்று வந்த பிறகு எனக்கு ஒரு கவலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பேச்சாளர்கள் இல்லாமல் போய்விட்டார்களே என்ற கவலைதான் அது .

No comments: