August 16, 2007

பல்லாங்குழி

தமிழர்களின் பண்பாட்டில் விளையாட்டுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. பாண்டி, பல்லாங்குழி, நொண்டி, குண்டு விளையாட்டு, பம்பரம் விடுதல், கபடி........ என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். தமிழர்கள் விளையாட்டை ஒருபோதும் விளையாட்டாக விட்டுவிட்டதில்லை. அதனால் தான் முக்கியமான திருமணச் சடங்குகளில் அதற்கு முக்கிய இடத்தை அளித்திருக்கிறார்கள். ஒரு சிறு குடத்தில் நீரை நிரப்பி அதில் மோதிரத்தை போட்டு மணமகன், மணமகளை எடுக்கச் செய்யும் விளையாட்டை தமிழ் சினிமாக்களில் பார்த்திருப்போம். சமீபத்தில் திருச்சிக்கு ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணம் முடிந்ததும் வரும் முதல் சனிக்கிழமை அன்று மணமகள் வீட்டில் ஒரு விருந்து வைக்கிறார்கள். அந்த விருந்திற்கு சனியாறு விருந்து என்று பெயர். சனியாறு விருந்து என்று அழைப்பிதழும் அச்சடித்திருந்தார்கள்.

அந்த சனியாறு விருந்தில் கலந்து கொண்ட நான் அந்த சடங்குகளை கவனித்துக் கொண்டே வந்தேன். ஒரு கட்டத்தில் மணமகளும், மணமகனும் எதிர் எதிரே அவரவர் உறவினர்களுடன் அமர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மத்தியில் பல்லாங்குழி பலகை வைக்கப்பட்டது. இரு தரப்பிலும் ஆயிரம் ருபாய் நோட்டை நடுவர் போன்று இருந்த ஒருவரிடம் பெட் கட்டினார்கள். கடி பாக்கு(இந்த பாக்கிலிருந்துதான் சீவல் தயாரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்)என்ற ஒருவகை பாக்கை கொண்டு பல்லாங்குழி விளையாடினார்கள். இரு தரப்பிலும் ஒரே உற்சாகம். மணமகனுக்கு சகோதரி முறை வரும் இளம் பெண்கள் மணமகனுக்கு சப்போர்ட் செய்ய மணமகளுக்கு சகோதரி முறை வரும் இளம்பெண்கள் மணமகளுக்கு சப்போர்ட் செய்ய அந்த அரங்கமே அல்லோலகப்பட்டது.

சில பெரியவர்கள் சற்றே தூரத்தில் அமர்ந்திருந்தாலும் ஆட்டத்தை கவனித்து டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தது தனிக்கதை. முடிவில் மணமகன் வெற்றி பெற்றதாக அறிவித்து ரூ.2000த்தையும் அவருக்கு வழங்க மணமகளுக்கு சப்போர்ட செய்த இளம் பெண்கள், இதை ஏற்க முடியாது. நாங்கள்தான் ஜெயித்தோம். எங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று செல்லமாக ரகளையில் ஈடுபட்டார்கள். இருந்தாலும் முடிவு அறிவிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டதுதான் சில பெரியவர்கள் அறிவித்துவிட அந்த இளம்பெண்களின் முகம்போன போக்கை பார்க்க வேண்டுமே. இந்த ஆட்டம் முடிந்ததும் நடுத்தர வயது பெண்மணியிடம் இந்த பல்லாங்குழி ஆட்டம் பற்றி பேச்சுக் கொடுத்தேன். எங்கள் சமூகத்தில் சனியாறு விருந்தின்போது பல்லாங்குழி ஆடுவது வழக்கம். ஆட்டத்தில் மணமகள் ஜெயித்தாலும் மணமகன் ஜெயித்ததாக அறிவித்து விடுவார்கள் என்று மணமகன் தரப்பின் வெற்றி ரகசியத்தை போட்டு உடைத்தார். மணமகன் மணமகளுக்கு மட்டுமல்ல இரு குடும்பத்தாருக்கும் இடையே பரஸ்பரம் நட்பு ஓங்கி வளர வேண்டும் என்பதற்காகவும் இந்த விளையாட்டு என்கிறார் அந்தப்பெண். குடும்பம என்ற அமைப்பை கட்டமைக்க நம் பெரியவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் பாருங்கள். இதுபோன்று சுவாரஸமான சடங்குகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

உங்களுக்காக சில காட்சிகள்

வீட்டைவிட்டு வெளியே வந்தால் நமக்காக பல சுவாரஸ்யங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. பல நேரங்களில் ஒரு நிமிட ரசிப்போடு அந்த சுவாரஸ்யங்கள் நமக்குள் புதைந்து போகின்றன. அப்படிப்பட்ட சுவாரஸ்யங்களை சிலவற்றை இங்கே நீங்கள் ரசிக்கலாம்.
ஆடி மாதம் வந்துவிட்டாலே சென்னையில் ஒருவித உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அதுவும் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உற்சாகத்திற்கு கேட்கவே வேண்டாம். எல்லா அம்மன் கோவில்களிலும் கச்சேரி களை கட்டுகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க சந்திப்புகளில்கூட மேடை அமைத்து இசைக் கச்சேரிகள் நடத்துகிறார்கள். எல்லா இடங்களிலும் மின்விளக்குகளால் ஆன அம்மனின் கட் அவுட்டுகள் மின்னுகின்றன. சென்னை சேத்துப்பட்டில் இரவு 11 மணிக்கு எடுக்கப்பட்ட சில படங்களை பாருங்களேன்.





ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட தன் மனைவி சீதா தேவியை மீட்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு ஷ்ரீ ராமபிரான் பாலம் அமைத்ததாக ஹிந்துக்கள் நம்புகிறார்கள். சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் இந்த ராமர் பாலத்தை மத்திய அரசு இடித்து வருகிறது. இதனை கண்டித்து ஹிந்து அமைப்புகள் தீவிரமாக போராடி வருகின்றன. உடுப்பி பெஜாவர் மடத்தின் அதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இந்த ராமர் பாலத்தைக் காக்கும் போராட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்கிறார். ஆகஸ்டு 12ம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இந்து அமைப்புகள் நடத்திய உண்ணாவிரதப்போராட்டத்தில் பெஜாவர் மடாதிபதி தனது சீடர்களுடன் பங்கேற்றார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண் ஒரு
காதை அடைத்துக் கொண்டு செல்லில் கதைக்கிறார்



மொபைல் போனில் பேசுகிறார் 77 வயது பெஜாவர் மடாதிபதி


உண்ணாவிரதப் போராட்டத்தில் பெஜாவர் மடாதிபதி பேசுகிறார்


உண்ணாவிரதப் பந்தலில் செய்தியாளர்களிடம் பேசுகிறார்

வி.இ.ப தலைவர் எஸ்.வேதாந்தம்



இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அவர் ஆகஸ்டு 10ம் தேதி நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு மாம்பழம் கொடுத்து ஆசி வழங்கினார். ஒருசில நிருபர்களைத் தவிர மற்றவர்கள் காலில் அணிந்திருந்த ஷூக்களை கழற்றி விட்டு பயபக்தியுடன் சுவாமியிடமிருந்து பழங்களை பெற்றுக்கொண்டனர். இந்த நேரத்தில் அருகில் இருந்த இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் பழம் பெரும் பத்திரிகையாளர்கள் என்று கமெண்ட் அடிக்க எல்லோருடைய கவனமும் அவர் பக்கம் சென்றது. பெஜாவர் மடாதிபதியின் சம்ஸ்க்ருதம் கலந்த இந்தி உரையை இராம.கோபாலன் தமிழில் மொழிபெயர்த்தார். பத்திரிகையாளர் சந்திப்பிலும், உண்ணாவிரதப் பந்தலிலும் எடுக்கபப்ட்ட சில புகைப்படங்களை பாருங்கள். உங்கள் கமெண்ட்களை பின்னூட்டம் இடுங்கள்.

'பழம்' பெரும் பத்திரிகையாளர்கள்


உண்ணாவிரதப் போராட்ட மேடையில் ரிலாக்ஸாக
ராமாயணம் படிக்கிறார் பெஜாவர் மடாதிபதி
செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசுகிறார்
பெஜாவர் மடாதிபதி

August 08, 2007

இது கற்பனை அல்ல

3007ம் ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் ஒரு மாணவனிடம் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது என்று எழுதச் சொன்னால் எப்படி எழுதுவான்.
இப்படிதான் எழுதுவான்.

21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியா என்று அழைக்கப்பட்ட நாடு மிக உன்னத நிலையில் இருந்தது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் பண மழை பொழிந்தது. குக்கிராமங்களில் வானம் பார்த்த பூமி கூட கோடிக்கணக்கில் விலை போனது. பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவாக இருந்ததால் முதிர் கன்னிகளுக்கும், அழகற்ற பெண்களுக்கும்கூட உடனே திருமணம் நடந்தது. குண்டு வைத்து அப்போது பெரும்பான்மையாக வாழ்ந்த ஹிந்துக்களைக் கொன்று குவித்தவர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். 20ம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நகராக விளங்கிய மும்பையை குண்டு வைத்து தகர்த்த தாவூத் இப்ராகிம் என்பவர் பாலிவுட் என்றழைக்கப்படும் மும்பை திரையுலகையே தன் பிடிக்குள் வைத்திருந்தார்.

ஒருமுறை இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அன்றைய பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சித் தலைவர் சோனியா உள்ளிட்டோர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி ஒளிந்து கொண்டார்கள். பயங்கரவாதிகளின் தாக்குதலை இந்திய ராணுவமும், தலைநகர் டெல்லி காவல்துறையினரும் வெற்றிகரமாக முறியடித்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நாடாளுமன்ற தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த ஜிலானி என்பவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். இன்னொரு முக்கிய குற்றவாளி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீதா தாக்குதல் நடத்தினார்? இந்திய நாடாளுமன்றத்தின் மீதுதானே தாக்குதல் நடத்தினார். அதற்காக எதற்கு தண்டனை? வேண்டுமானால் நாடாளுமன்றத்தை தகர்க்க முடியாமல் பாதியிலேயே தடுத்து உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு வேண்டுமானால் தண்டனை தரலாம் என்று அரசியல் கட்சிகள் பேசும் அளவிற்கு இந்தியாவில் அப்போது மதச்சுதந்திரம் இருந்தது.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஒருவர் எனக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் முடிந்து விட்டது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். 14 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழந்து போரடித்து விட்டது. எனவே நாங்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டு ஒரே வீட்டில் நண்பர்களாக வாழப் போகிறோம் என்று அறிவித்தார். 20ம் நூற்றாண்டின் இறுதியில் கோலிவுட் என்றழைக்கப்பட்ட தமிழ் திரையுலகை தன் இசையால் வசப்படுத்திய இளையராஜாவின் மகனும், மருமகளும் விவாகரத்து கேட்டு ஒன்றாக ஒரே காரில் நீதிமன்றம் சென்று ஒரே பேனாவால் விவாகரத்து மனு எழுதிக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் அன்று எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் சிரித்து பேசிக் கொண்டிருந்த செய்தி தமிழ் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்தது. இப்படி விவாகரத்து பெறும்போதுகூட பெண்கள் மகிழச்சியோடு இருந்தார்கள். கணவனை விவாகரத்து செய்துவிட்டு ஒரே வீட்டில் நண்பர்களாக வாழ முடியும் என்கிற அளவுக்கு பெண்களுக்கு சுதந்திரம் இருந்தது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த முக்கிய நகரமான கோயமுத்தூரில் குண்டு வைத்து 58 பேர் இறக்க காரணமான கேரளத்தைச் சேர்ந்த (இது தமிழகத்திற்கு பக்கத்தில் உள்ள ஒரு மாநிலம்) மதானி என்பவர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார். அவரை கேரள மாநில போலீசார் ராஜ மரியாதையுடன் அழைத்துச் சென்றனர். அவருக்கு மந்திரி பதவி கொடுக்க தயாராக இருப்பதாக அப்போது முதல்வராக இருந்த அச்சுதானந்தம் என்பவர் அறிவித்தார்.

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேரு என்பவரின் குடும்பம் இந்தியாவில் அப்போது மிகச் செல்வாக்கோடு இருந்தது. நேருவுக்கு பிறகு அவரது மகள் இந்திரா. இந்திராவுக்கு பிறகு அவரது மகன் ராஜீவ் என அவரது குடும்பத்தினரே பிரதமராக பதவி வகித்தனர். ராஜீவ் இங்கிலாந்திற்கு படிப்பதற்காச் என்றார். அங்கு இத்தாலியைச் சேர்ந்த சோனியா என்பவரை காதலித்து மணந்து கொண்டார். ராஜீவ் மறைவுக்கு பிறகு சோனியாவால் மட்டுமே 100 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை காப்பாற்ற முடியும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதை உடனடியாக மற்றவர்கள் ஏற்க மறுத்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு பலரும் ஏற்றுக் கொண்டனர். சோனியா பிரதமராக இல்லாவிட்டாலும் பிரதமரின் குடுமி சோனியாவின் கையில்தான் இருந்தது.(அப்போது இந்தியாவில் குடுமி வைக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் பிரதமராக இருப்பவர்கள் மட்டும் சோனியா பிடிப்பதற்கு வசதியாக குடுமி வைத்துக் கொண்டனர்.)

சோனியாவின் ஒரே மகள் பிரியங்காவிற்கு டெல்லியில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு தனக்கு அழைப்பு இல்லாதாபோதும்கூட அப்போது தமிழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த மூப்பனார் என்பவர் கூடை கூடையாக மல்லிகைப் பூக்களை அனுப்பி வைத்தார். அந்த அளவிற்கு பெருந்தன்மை மிக்கவர்களாக தமிழர்கள் இருந்தனர். மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ் படத்தில் நடிக்க வந்த நடிகைகளுக்கு தமிழர்கள் முக்கிய இடம் கொடுத்தனர். மும்பையில் இருந்த தமிழ் படத்தில் நடிக்க வந்த குஷ்பு என்பவர் பெயரை இட்லிக்கு(தமிழகத்தின் பிரபலமான ஒரு சிற்றுண்டி) வைத்து விட்டனர். குஷ்பு இட்லி சாப்பிடாதவர்கள் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அந்த காலகட்டத்தில் இந்தியாவில் மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் பல அமைப்புகள் செயல்பட்டன. இவர்கள் ஹிந்துக்களை குண்டு வைத்தும், அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டும் கொன்று குவித்தவர்களை நீதிமன்ற வழக்குகளில் இருந்தும், காவல்துறையினரிடம் இருந்தும் காப்பற்றுவதை கடமையாகக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் எங்காவது ஹிந்துக்களின் இடங்களில் கட்டப்பட்ட சர்ச் அல்லது மசூதிக்கு சிறு சேதாரம் விளைவித்த ஒரு ஹிந்துவைக் கூட அவர்கள் தப்பவிட்டதில்லை. அவர்களுக்கு பல ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தனர். இப்படியாக 20ம் நூற்றாண்டின் இறுதியிலும் 21ம்நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியா ஓர் உன்னத இடத்தில் இருந்தது.

(குறிப்பு : கட்டுரை சுருக்கமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால் பல விஷயங்கள் விட்டுப்போய் விட்டது. மன்னிக்கவும்)

June 23, 2007

தியாகி வைரப்பனைத் தெரியுமா உங்களுக்கு?

தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உப்புக்கு பெயர் பெற்ற வேதாரண்யத்தில் 1930ல் நடந்த சம்பவம் இது. அப்போது சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. பொதுமக்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களையும் அவர்களது எடுபிடிகளையும் புறக்கணித்து வந்த நேரம் அது. 1930ம் ஆண்டு ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டம் அந்தப் பகுதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. உப்பு காய்ச்ச தடைவிதித்த ஆங்கிலேயே அரசுக்கும், அவர்களது பணியாளர்களுக்கும் உதவிகள் எதுவும் செய்வதில்லை என்று மக்கள் தாங்களுக்குள்ளாகவே ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொண்டனர்.
அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கே.வைரப்பன் என்ற முடி திருத்துபவரிடம் முடி திருத்த வந்தார். கே.வைரப்பன் ஆங்கிலேயர்களுக்கும், அவர்களது பணியாளர்களுக்கும் முடி திருத்துவதில்லை என்று உறுதி பூண்டிருந்தார். முடி திருத்தும் வேலை நடந்து கொண்டிருந்தது. பேச்சுவாக்கில் அவர் ஒரு கான்ஸ்டபிள் என்ற உண்மை, 24 வயதான வைரப்பனுக்குத் தெரிந்தது. பாதி சவரம் செய்த நிலையில் அந்தக் கான்ஸ்டபிளுக்கு சவரம் செய்ய மறுத்து விட்டார். கான்ஸ்டபிள் அச்சுறுத்தியபோதும் வைரப்பனின் தேசபக்தி அசையவில்லை. இதனால் வைரப்பன் கைது செய்யப்பட்டு, 1930ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணை செய்த நீதிபதி வைரப்பனிடம் அந்த போலீஸ்காரருக்கு முழுச்சவரமும் செய்துவிட்டால் மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுவித்து விடுவதாகக் கூறினார். நீதிபதியின் இந்த கூற்றை உறுதியாக மறுத்த வைரப்பன் " உங்களுக்கு மனிதாபிமானம் இருந்தால், இதோ இருக்கிறது கத்தியும் பெட்டியும் நீங்கள் வேண்டுமானால் அவருக்கு சவரம் செய்யுங்கள்" என்று பதிலடி கொடுத்தார். இதைக் கேட்ட நீதிபதி ஆத்திரமடைந்து வைரப்பனுக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்தார். வேலூர், திருச்சி சிறைகளில் இந்த தண்டனையை அவர் அனுபவித்தார். 1906, மே 22ல் பிறந்த வைரப்பன் தனது 90வயதில் 1997 ஆகஸ்டு 15ம் தேதி நாடு தனது சுதந்திர தின பொன்விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் மறைந்தார். இப்படிப்பட்ட தியாகி வைரப்பனுக்கு சங்கம்மாள் என்ற மனைவியும், காந்திமதி என்ற மகளும், சண்முகசுந்தரம், பார்தீபன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
இவரது நினைவாக வேதாரண்யம் - நாகப்பட்டினம் சாலையில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரனின் முயற்சியால் அமைக்கப்பட்ட இந்த நினைவு ஸ்தூபியை 1998ல் ஜி.கே.மூப்பனார் திறந்து வைத்தார்.இப்படிப்பட்ட ஒரு தேசபக்தரின் நூற்றாண்டு விழா பி.வி.ராஜேந்திரன் தலைமையில் கொண்டாப்பட்டுள்ளது. தியாகி வைரப்பன் நினைவு ஸ்தூபியிலிருந்து உப்பு சத்தியாகிரக கட்டிடம் வரை பி.வி.ராஜேந்திரன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக கட்டிடத்தில் நடந்த நூற்றாண்டு விழாவில் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல நிர்வாகி வேதரத்தினம் போன்றவர்கள் கலந்துகொண்டு தியாகி வைரப்பனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். இந்த விழாவில் தியாகி வைரப்பனின் மனைவி மற்றும் மகன்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
காந்தியும் நேருவும் மட்டுமே தேசபக்தர்கள், தியாகிகள் என்று எழுதியும் பேசியும் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகளுக்காக இந்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தியாகி வைரப்பனுக்கு 1998ல் நினைவுச் சின்னம் அமைத்ததோடு அவரது நூற்றாண்டை நினைவில் வைத்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

June 22, 2007

இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய வீர மங்கைகள்!

மேலே உள்ள இரண்டு புகைப்படங்களையும் உற்றுப்பாருங்கள். முதல் படத்தில் இருப்பவர்கள்தான் இரண்டாவது படத்திலும் இருக்கிறார்கள். (ஒரு சிலர் மாறியிருக்கலாம்) முதல் படம் 1977ல் எடுக்கப்பட்டது. அதில் இருப்பவர்கள்
நின்று கொண்டிருப்பவர்கள்(இடமிருந்து வலம்) மோகனா, அயனாவரம்(தந்தை பெயர் கந்தசாமி), கஸ்தூரி, திரு.வி.க நகர்(கணவர் பெயர் பழனி), அமிர்தவள்ளி, சின்ன பரமேஸ்வரி, மாதவரம்( இவர் இப்போது இல்லை), பாரதி, திருவல்லிக்கேணி(கணவர் பெயர் ரங்கராஜன்), சின்ன கல்யாணி, பெரம்பூர்(கணவர் பெயர் சிவக்குமார்), பாரதமாதா பரமேஸ்வரி, பெரம்பூர்(தந்தை பெயர் வேணுகோபால்)
அமர்ந்திருப்பவர்கள் கமலா தேவேந்திரன், ஓட்டேரி(கணவர் பெயர் தேவேந்திரன்), பெரிய கல்யாணி, பெரம்பூர், ஜெயம்மா எத்திராஜ், திரு.வி.க நகர்( இவர் இப்போது இல்லை), சந்திரம்மா கோதண்டபாணி, திரு.வி.க நகர்(இவரும் இப்போது இல்லை) அம்சவள்ளி, ஓட்டேரி(இவரும் மரணமடைந்து விட்டார்)
இரண்டாவது படம் கடந்த 2006 ஜூன் 25ம் தேதி என்னால் எடுக்கப்பட்டது. இதில் முதல் படத்தில் இருக்கும் அமிர்தவள்ளி, பாரதமாதா பரமேஸ்வரி, எஸ்.கல்யாணி,மோகனா, கமலா, இந்திரா ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் யார்? இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். `இரண்டாவது சுதந்திரப் போர்' என்று வர்ணிக்கப்படும் எமெர்ஜென்ஸிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள். சிறை சென்றபோது இவர்களின் வயது 13 லிருந்து 35க்குள் என்பதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுப்படுத்தும் வகையில் 2006ம் ஆண்டு சென்னையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திராவின் அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்ற இந்த வீர மங்கைகளும் வந்திருந்தனர். அவர்களுடன் நான் நீண்ட நேரம் கலந்துரையாடினேன். அவர்களது அனுபவங்களை கேட்க, கேட்க ஏதோ திகில் கதை கேட்பதைப்போல இருந்தது.
13 வயதில் சிறை சென்ற அமிர்தவள்ளி தற்போது சென்னை அமைந்தகரையில் வசிக்கிறார். அவரிடம் அவரது போராட்ட அனுபவங்களை கேட்டேன். அதை அப்படியே கேள்வி - பதில் வடிவில் தருகிறேன்.
சிறை சென்றபோது உங்களுக்கு என்ன வயது?
13
அந்த வயதில் எமெர்ஜென்ஸி என்றால் என்ன என்று தெரியுமா? ஏன் எமெர்ஜென்சியை எதிர்த்து போராடினீர்கள்?
காரணம் தெரியாது. எங்கள் குடும்பம் ஆர்.எஸ்.எஸ் குடும்பம். ஆர்.எஸ்.எஸ்ஸை தடை செய்துவிட்டார்கள். நாம் போராட வேண்டும். அதற்காக ஒரு ரகசிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் பத்மநாபன் எங்களிடம் சொன்னார். அதனால் அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.
அந்த ரகசிய கூட்டத்தில் என்ன நடந்தது?
அந்த கூட்டத்தில் எப்படி போராட வேண்டும், ஒவ்வொருவருக்கும் என்ன வேலை என்பதை பிரித்துக் கொடுத்தார்கள்.
உங்களுக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டது?
சென்னை தி.நகரில் இந்திராவின் அடக்குமுறையை எதிர்த்து சத்தியாகிரகம் அதாவது ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். அதன்படி தி.நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். "இந்திராவின் சர்வாதிகாரம் ஒழிக!", "ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்கு", "வந்தே மாதரம்'` போன்ற கோஷங்களை எழுப்பிக்கொண்டே நாங்கள் சத்தியக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டீர்கள்?
15க்கும் அதிகமான பெண்கள் இருந்தோம். அவர்களில் பலர் இப்போது உயிரோடு இல்லை.
எப்போது கைதானீர்கள்?
தி.நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தும்போதே போலீசார் எங்களை பிடித்து விட்டனர். ஆனால் நாங்கள் சிறுமிகளாக இருந்ததால் எங்களை எச்சரித்து விட்டுவிட்டார்கள். அடுத்த வாரம் நாங்கள் அயனாவரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்துவிட்டார்கள்.
எத்தனை நாள் சிறையில் இருந்தீர்கள்?
90 நாட்கள்
சிறையில் என்ன செய்தீர்கள்?
சிறையில் பஜனை, யோகா என்று பொழுது கழுந்தது.
சிறை சென்றதற்காக எப்போதாவது வருத்தப்பட்டுள்ளீர்களா?
நிச்சயமாக இல்லை. சிறை சென்றதற்காக பெருமைப்படுகிறேன்.


ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் பத்மநாபனின் வேண்டுகோளை ஏற்று 13 வயது அமிர்தவள்ளி மட்டுமல்ல, அயனாவரத்தைச் சேர்ந்த 13 வயது மோகனாவும் சிறை சென்றுள்ளார். பெரம்பூரைச்சேர்ந்த எஸ்.கல்யாணிக்கு அப்போது வயது 32. ஐந்து குழந்தைகளுக்கு தாயான அவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டளையை ஏற்று சிறை சென்றிருக்கிறார். இதுபோலவே ஓட்டேரியைச் சேர்ந்த 35 வயது கமலா தேவேந்திரனும் தனது குழந்தைகளை விட்டுவிட்டு சிறை சென்றார். இப்படி பலரின் தியாகம் பிரமிக்க வைத்தது. இவர்கள் அனைவரும் 90 நாட்கள்சிறையில் இருந்திருக்கிறார்கள்.
13 வயதில் சிறை சென்ற மோகனாவிடம் சிறை சென்றதால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்று கேட்டேன்.
சிறை சென்ற பெண் என்பதால் எனது திருமணம் தள்ளிக்கொண்டே போனது. திருமணம் நடந்த பிறகு புந்த வீட்டிலும் இதனால் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஆனாலும் நான் ஒருபோதும் சிறை சென்றதற்காக வருத்தப்பட்டதில்லை என்றார். மோகனா மட்டுமல்ல நான் சந்தித்த எல்லா பெண்களுமே சிறை சென்றதற்காக பெருமிதம் கொள்வதாகவே கூறினார்கள். சங்கத்திற்காவும்( ஆர்.எஸ்.எஸ்) நாட்டிற்காகவும் தானே சிறை சென்றோம். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்றே எல்லோரும் சொன்னார்கள்.
எமர்ஜென்சி என்றதும் இவர்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பெரம்பூர் திரு.வி.க நகரைச் சேர்ந்த திருமதி ஜெயம்மாதான். இவர் தலைமையில்தான் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றதாம். ஆனால் அவர் இப்போது உயிரோடு இல்லை. சின்ன பரமேஸ்வரி, அம்சவள்ளி என்று தங்களோடு போராடி இறந்து போனவர்களின் நினைவுகளை அவர்கள் சோகத்தோடு நம்மிடம் விவரித்தார்கள்.
எமெர்ஜென்சியின்போது தற்செயலாக ஒருசில நாட்கள் சிறைசெல்ல நேர்ந்தவர்கள்கூட மிசா ராமசாமி, மிசா ராணி என்றெல்லாம் தங்களின் பெயர்களுக்கு முன்னாள் மிசா என்று பட்டம் சூட்டிக்கொண்டு லாபமடைந்தபோது, உண்மையிலேயே இந்திராவின் அடக்குமுறையை எதிர்த்து போராடி வெற்றி கண்ட இந்த வீர மங்கைகளின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டமான ஒன்று.

June 21, 2007

வாடிப்பட்டி வாடிமா நகர் ஆனது!

மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி என்ற ஊர் இருக்கிறது. இந்த வாடிப்பட்டி கடைச்சங்க காலத்து பாண்டிய மன்னர்களின் வரலாறுகளுடன் பின்னிப் பிணைந்த ஒரு சிறு நகரமாகும். குலசேகரப் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சிக் கோயில் ஒன்று இந்த நகரில் உள்ளது. இந்தக் கோயிலின் அமைப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அமைப்பைப் போன்று உள்ளது.
பாண்டிய மன்னர்கள் மதுரை மீனாட்சிக் கோயிலைப் போன்ற வடிவமைப்பைக் கொண்ட சிறு கோயில்களை மதுரையின் நான்கு புறமும் 25 கி.மீ. தூரத்தில் கட்டியிருக்கிறார்கள். மதுரைக்கு மேற்கே ஆனையூரிலும், தெற்கே திருமங்கலத்திலும், கிழக்கே திருப்புவனம் கொந்தகையிலும் இதே போன்ற மீனாட்சிக் கோயில்கள் உள்ளன. குலசேகரன் கோட்டை மீனாட்சிக் கோயிலுக்கும் பாண்டியர்களின் படை வீரர்கள் தங்கியிருந்த பாடி வீட்டிற்கு வாயில் கிராமமாக இருந்த ஊர் வாடிப்பட்டி ஆனதாக வரலாறு சொல்கிறது.
இப்படி வரலாற்றுப் பின்னணி கொண்ட வாடிப்பட்டிக்கு புதிய வரலாறு எழுதிக்கொண்டிருக்கிறார்கள் கிறிஸ்தவ பாதிரிகள். வாடிப்பட்டயில் பொன்பெருமாள் மலை என்ற மலை இருக்கிறது. இந்த மலையைச் சுற்றி மிகவும் தொன்மையான பிரசித்திப் பெற்ற செல்லாயி அம்மன் கோயிலும் ,பால தண்டாயுதபாணி கோயிலும் உள்ளன. இந்த பொன்பெருமாள் மலைக்கு அருகில் ஒரு பாறைமீது 6 ஆண்டுகளுக்கு முன்பு சிலுவை நட்டார்கள். வழக்கம் போலவே ஹிந்துக்கள் பெருந்தன்மையாக இருந்து விட்டார்கள். சில மாதங்களில் அந்தச் சிலுவையை மேரி மாதா என்றார்கள். அதற்கு பிறகும் ஹிந்துக்களின் பெருந்தன்மை தொடரவே அந்த இடத்தில் ஒரு சர்ச் கட்டினார்கள். அந்த சர்ச்சை மெயின்ரோட்டில் இருந்து கிழக்கு நோக்கி பழமையான பொன் பெருமாள் மலை வரை விரிவுபடுத்தி கட்டினார்கள்.
பிறகு அங்கு ஒரு நீரூற்று வருவதாகவும், அது எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை என்றும், அந்த நீரைப் பருகினால் பலவிதமான நோய்கள் குணமாகும் என்றும் திட்டமிட்ட செய்திகளைப் பரப்பினார்கள். இந்த நீரூற்று வாடிகனுக்கு இணையானது என்றும் பிரச்சாரம் செய்தார்கள். மதுரை மட்டுமல்லாது மற்ற மாவட்டத்து மக்களும் இங்கு வரத் தொடங்கினார்கள். ஆண்டுக்கு ஒருமுறை பால தண்டாயுதபாணி கோயிலில் பூப்பல்லக்கு நடக்கும். இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இந்த பூப்பல்லக்கு நடக்கும் இடத்திற்கு நேர் எதிரேதான் கிறிஸ்தவர்கள் சர்ச் கட்டியுள்ளனர்.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியாக மனிதனையும் கடித்து விட்டார்கள். ஆம்! வாடிப்பட்டி என்ற பெயரை வாடிமா நகர் என்று மாற்றி விட்டார்கள். இப்போது அவர்கள் பிரம்மாண்டமாக கட்டியுள்ள சர்ச் பெயர்ப் பலகையில் வாடிப்பட்டி என்பதற்கு பதிலாக, வாடிமாநகர் என்று எழுதியுள்ளனர். வாடிப்பட்டியில் உள்ள உணவு விடுதிகளின் பெயர்ப் பலகையிலும் வாடிமாநகர் என்ற பெயரே பல வண்ணங்களில் மின்னுகிறது. இதுவரை ஹிந்துக்களை மதம் மாற்றி வந்தவர்கள், இப்போது ஊரின் பெயரையே மாற்றி வருகிறார்கள்.
பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வாடிமாநகர் என்று எப்படி பெயர் மாற்ற முடியும்? பெயரை மாற்றிய சர்ச் நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளது. ஆனாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிரிகளின் இந்த அராஜகத்திற்கு அரசு துணை போகிறதா?
(குறிப்பு : வாடிப்பட்டி சர்ச் வளாகத்தில் பல இடங்களில் போர்வெல் போடப்பட்டுள்ளது. அதோடு இங்கு ஒரு மினரல் வாட்டர் ப்ளாண்டும் உள்ளது. இந்த ப்ளாண்ட் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர்தான் புனிதத் தீர்த்தமாக பாட்டில் பத்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சர்ச்சில் வழங்கப்படும் புனித தீர்த்தத்தின் ரகசியம் இதுதான். வேளாங்கண்ணியிலும் இதே கதைதான்.)

June 15, 2007

விளக்கு எரியுமா வேங்கடரமணர் ஆலயத்தில்?

ராஜா கோட்டை என்றழைக்கப்படும் ராஜகிரி கோட்டையின் கீழ்தளத்திற்கு வெளியே பாண்டிச்சேரி வாயிலின் அருகில் தெற்கு பக்கமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது வேங்கடரமணர் ஆலயம். ராஜகிரி கோட்டையின் மேலிருந்தும், கிருஷ்ணகிரி கோட்டையின் மேலிருந்தும் பார்க்கும்போது உயர்ந்த ராஜகோபுரத்துடன் காணப்படும் இக்கோயிலின் வடிவமைப்பு நம்மை பிரமிப்படையச் செய்கிறது. கி.பி. 1540க்கும் 1550க்கும் இடைப்பட்ட காலத்தில் முத்தையாலு நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோயிலில் தேவியருக்கும், ஆண்டாளுக்கும், நரசிம்மருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. கோயிலின் உள்ளே உள்ள இரண்டு பெரிய பிரகாரங்களின் வழியே செல்லும்போது தென்படும் கல்யாண மண்டபமும், உற்சவ மண்டபமும், பாறைகற்களால் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட யாகசாலையும், அழகிய சிற்பத் தூண்களுடன்கூடிய மண்டபமும், பாறை கற்களால் கட்டப்பட்ட பாதாள கஜானாவும் ஹிந்து மன்னர்களின் கலை ஆர்வத்தையும், அக்கால கலைஞர்களின் படைப்புத் திறனையும் பறைசாற்றுகின்றன. இக்கோயிலுக்கு வெளியே நான்கு ஒற்றைச் சிற்பத்தூண்களுடனும், சிறிய அழகிய கோபுரத்துடனும் கட்டப்பட்ட சிறுசிறு ஆலயங்கள் வேங்கடரமணர் ஆலயத்திற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.
ஆனால் இந்தச் சிற்பங்களும், மண்டபங்களும் முஸ்லிம் அரக்கர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள காட்சி நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. சுவாமி விக்கிரகங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் சூறையாடப்பட்டதால் மூலஸ்தானங்கள் வெற்று மண்டபங்களாகக் காட்சி தருகின்றன. ராஜகோபுரத்தைத் தாங்குவதற்காக அதன் உள்ளே அமைக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற தேக்கு மரத்தூண்கள் முஸ்லிம்களால் கொள்ளையடிக்கப்பட்டதால் ராஜகோபுரம் சரிந்து விழும் நிலையில் உள்ளது. செஞ்சிக்கோட்டை சிறிதுகாலம் ஃபிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ஃபிரெஞ்சுக்காரர்களால் வேங்கடரமணர் ஆலயத்திலிருந்து ஏராளமான சிற்பத் தூண்கள் பாண்டிச்சேரிக்கு கடத்தப்பட்டன. இந்தச் சிற்பத்தூண்கள் ஃபிரெஞ்சு ஆட்சியின்போது பாண்டிச்சேரி கவர்னராக இருந்த துய்ப்லெக்ஸின் சிலையை சுற்றி நிறுவப்பட்டுள்ளன. (பாண்டிச்சேரியில் இருந்த புகழ்பெற்ற வேதபுரீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு ஜென்மாக்ரனி மாதா ஆலயம் என்ற பெயரில் சர்ச் கட்டியவர் இந்த துய்ப்லெக்ஸ்தான்) இச்சிலையையும், சிற்பத்தூண்களையும் இன்றும் நாம் பாண்டிச்சேரி கடற்கரையில் காணலாம். தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டைக்குள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இந்து முன்னணி நடத்திய போராட்டத்தின் விளைவாக சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதுபோன்றே தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டை அடிவாரத்திலுள்ள வேங்கடரமணர் ஆலயத்திற்கும் விமோசனம் பிறக்கும் என்று செஞ்சி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக் கிறார்கள்.