October 04, 2007

இராம.கோபாலனின் சதாபிஷேக விழா - நேரடி ரிப்போர்ட்!

இந்து முன்னணியின் நிறுவனர் இராம.கோபாலன் கடந்த அக்டோபர் 3-ம் தேதி தனது 80-வது வயதை நிறைவு செய்தார். இதனையொட்டி சென்னை சாலிகிராமம் கோல்டன் பாரடைஸ் திருமணக் கூடத்தில் சிறு விழா ஒன்றிற்கு இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. காலை 7மணிக்கு யாகத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மாலை 5 மணிக்கு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. காலை 7 மணியிலிருந்து இரவு 8 மணிவரை ஏராளமான இந்து முன்னணித் தொண்டர்களும், பொதுமக்களும் குடும்பத்துடன் வந்து இராம.கோபாலனிடம் ஆசி பெற்று சென்றனர்.


ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த பிரச்சாரக் கி.சூர்யநாராயணராவ் இராம.கோபாலனுக்கு ஆசி வழங்குகிறார்


காலையில் நடைபெற்ற யாகத்தின்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் தக்ஷிண கே்ஷத்ர பிரச்சாரக் சேதுமாதவன், ஆர்.எஸ்.எஸ்ஸின் வடதமிழக அமைப்பாளர் உ.சுந்தர், பாரதீய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரதச் செயலாளர் என்.எம்.சுகுமாறன்,வித்யாபாரதியின் தென்பாரத அமைப்புச் செயலாளர் ஸ்தாணுமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று ஆயிரம் பிறை கண்ட இராம.கோபாலனிடம் ஆசிபெற்றனர். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் அகில பாரதச் செயலாளர் எஸ்.திருநாவுக்கரசர்,பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா, கவிஞர் காசி முத்துமாணிக்கம், மாநிலப் பொதுச் செயலாளர் குமாரவேலு உள்ளிட்ட பலர் இராம.கோபாலனுக்கு பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றனர்.

அம்பத்தூர் காஞ்சி காமகோடி நாட்டியாலயா குமாரி ரமணி குழுவினரின் பஜனை

இராம.கோபாலனுக்கு ஆள் உயர ரோஜா மாலை அணிவித்து வீரவாள் பரிசு வழங்குகிறார் தென்சென்னை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் மகேந்திரன்


மாலை 3 மணிக்கு நடந்த அம்பத்தூர் காஞ்சி காமகோடி நாட்டியாலயா குமாரி ரமணி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாலை 5 மணிக்கு பாராட்டுக் கூட்டம் துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத செயற்குழு விசேஷ அழைப்பாளர் கி.சூர்யநாராயண ராவ், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம், பா.ஜ.கவைச் சேர்ந்த லலிதா குமாரமங்கலம், இந்து முன்னணியின் மாநில ஆலோசகர் கே.பி.எஸ். பொன்பாண்டியன், ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த பிரச்சாரக் உத்தமராஜ், ஆர்.எஸ்.எஸ்ஸின் சென்னை மாநகரத் தலைவரும் இந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளருமான துரை.சங்கர் ஆகியோர் இராம.கோபாலனின் 60 ஆண்டு கால பொதுவாழ்க்கையை நினைவு கூர்ந்து பாராட்டிப் பேசினார்கள்.

இராம.கோபாலனின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி. முன் வரிசையில் வி.ஹி.பரிஷத்தின் மாநில இளைஞரணித் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி

. இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் முருகானந்தம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர்களில் ஒருவரான மகேந்திரன் ஆளுயுர ரோஜா மாலை அணிவித்து வீரவாள் வழங்கி இராம.கோபாலனிடம் ஆசி பெற்றார். இராம.கோபாலன் ஏற்புரையாற்ற தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் இராம.கோபாலனை பாராட்டி பலர் பேசினார்கள். அவற்றின் சுருக்கம்:


கே.பி.எஸ்.பொன்பாண்டியன்(இந்து முன்னணி மாநில ஆலோசகர்) :

கே.பி.எஸ். பொன்பாண்டியன் பேசுகிறார்


"நான் இந்த இயக்கத்தில் சிறுவயது முதலே வளர்ந்தவன் கிடையாது. திராவிட கட்சிகளின் மாய்மாலத்தில் ஏமாந்து அக்கட்சிகளில் பணியாற்றியவன். இராம.கோபாலன் அவர்களின் வழிகாட்டுதலோடு இந்து முன்னணியில் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். சிறுவனாக இருக்கும்போது என்னால் ஆர்.எஸ்.எஸ்ஸின் பயிற்சியை பெறமுடியவில்லை. என் மகன் ஆர்.எஸ்.எஸ்ஸில் பயிற்சி பெற்றவன். அதனால்தான் இன்று வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் ஒழுக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.இராம.கோபாலன் தமிழகம் முழுவதும் இந்த தள்ளாத வயதிலும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்காக பாடுபட்டு வருகிறார். அவ்ர நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்"


பி.உத்தமராஜ் (ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த பிரச்சாரக்) :


ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த பிரச்சாரக் பி.உத்தமராஜ் பேசுகிறார்


"இராம.கோபாலன் மிகச்சிறந்த பேச்சாளர். நான் ஆர்.எஸ்.எஸ்ஸின் வருடாந்திர பயிற்சி முகாம்களில் பங்கேற்றபோது இராம.கோபாலனின் பேச்சுகளால் பெரிதும் கவரப்பட்டேன். அப்போது தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலத்திற்கும் சேர்த்து முகாம் நடக்கும். இராம.கோபாலனின் தமிழ் உரையை திரு.ரங்கஹரி மலையாளத்தில் மொழிபெயர்ப்பார். பல நேரங்களில் அவர் இராம.கோபாலனின் பேச்சில் மயங்கி மொழிபெயர்க்கவே மறந்து விடுவார். அந்த அளவிற்கு அவர் பேச்சுக் கலையில் வல்லவர்"

துரை.சங்கர்(இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர்) :




"இராம.கோபாலன் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டிகள் எல்லாம் சுற்றுப்பயணம் செய்து பல பொறுப்பாளர்களை உருவாக்கி இருக்கிறார். அப்படி அவரால் உருவாக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இந்து சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்று தீர்க்கதரிசனமாக முடிவெடுத்துச் செயல்பட்டு வருபவர் இராம.கோபாலன். இன்று ராமர் பாலம் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பாலத்தைக் காப்பதற்காக ராமர் பாலம் காப்போம் என்று எழுதப்பட்ட பேனரை அணிந்து கொண்டு கோயில் கோயிலாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கினார். அதன்பிறகு ராமர் பாலத்தைக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 30 லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டி அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் ஒப்படைத்தார். இதன்பிறகுதான் ராமர் பாலம் பிரச்சினை தேசிய பிரச்சினையாக உருவெடுத்தது"


லலிதா குமாரமங்கலம்(பா.ஜ.க) :


முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி லலிதா குமாரமங்கலம் பேசுகிறார்




"நான் ஹிந்து இயக்கங்களுக்குப் புதியவள். நான் பல பெரிய தலைவர்களை சிறுவயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். என்னுடைய அண்ணன் ரங்கராஜன் குமாரமங்கலம் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர். அவர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தபோது பலர் நீங்கள் ஏன் பா.ஜ.கவில் சேர்ந்தீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நானும் அண்ணனிடம் இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறேன். அப்போது ஒருமுறை அண்ணன் என்னை இராம.கோபாலனைச் சந்திக்கச் செல்கிறேன். நீயும் வா என்று என்னையும் அழைத்துச் சென்றார். முதல் சந்திப்பிலேயே அவரது எளிமை தியாகத்தால் நான் கவரப்பட்டேன். இராம.கோபாலன் நீண்ட காலம் வாழ்ந்து எங்களுக்கெல்லாம் வழிகாட்ட வேண்டும்"


எஸ்.வேதாந்தம்(வி.ஹி.பரிஷத் அகில உலக செயல் தலைவர்) :


விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் பேசுகிறார்




விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில இளைஞரணித் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி இராம.கோபாலனுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்.



"நான் ஆர்.எஸ்.எஸ்ஸின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில அமைப்பாளராக இருந்த இராம.கோபாலன் அடிக்கடி திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருவார். அவர்தான் என்னை முழுநேரமாக சமுதாயப் பணியாற்ற வருமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று இன்று வரை முழுநேரமாக சமுதாய பணியாற்றி வருகிறேன். எழுத்தாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், பாடகர் என பல கோணங்களில் இராம.கோபாலனைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து முன்னணி இந்துக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடியது. முதல்வர் எம்.ஜி.ஆர் இந்து முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்து முன்னணியை பற்றி சொல்லிதான் கிறிஸ்தவ,முஸ்லிம் அமைப்புகளை சமாளித்து வருகிறோம் என்று எம்.ஜி.ஆர் கூறினார். அந்த அளவிற்கு இந்து முன்னணியை வளர்த்தவர் இராம.கோபாலன். வயதானதைப் பற்றி அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை. இந்த 80 வயதிலும் இளைஞரைப் போல அவர் தமிழகம் முழுவதும் தெருத் தெருவாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இராம.கோபாலன் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் சமுதாயப் பணியாற்ற அருள்புரியுமாறு இறைவனைப் பிராத்திக்கிறேன்"


கி.சூர்யநாராயணராவ்(ஆர்.எஸ்.எஸ்ஸின் அகிலபாரத செயற்குழு விசேஷ அழைப்பாளர்) :


இராம.கோபாலன் ஏற்புரையாற்றுகிறார். அருகில் கி.சூர்யநாராயண ராவ்



"இராம.கோபாலனின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவரது 60 ஆண்டுக் கால பொது வாழ்க்கையை எல்லோரும் அறிவோம். தமிழகத்தில் நிலவிவந்த ஒரு வித்தியாசமான சூழ்நிலையை மாற்ற ஒரு தனி அமைப்பு தேவை என ஆர்.எஸ்.எஸ்ஸில் முடிவு செய்யப்பட்டது. அதற்காக அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில இணை அமைப்பாளராக இருந்த இராம.கோபாலன் இந்து முன்னணிக்கு அனுப்பப்பட்டார். இந்து முன்ணணி பணிக்காக அவர் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக வேலை செய்தார். அதனால் அவரது உயிருக்குக் கூட ஆபத்து ஏற்பட்டது. இன்று தமிழகத்தில் இந்து சமுதாயத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் யார் என்று பட்டியலிடும்போது இராம.கோபாலனின் பெயர் முதலிடத்தில் வருகிறது. அந்த அளவிற்கு அவர் பிரபலமாகியிருக்கிறார். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்காகவே கடவுளால் படைக்கப் பட்டிருக்கிறார். இராம.கோபாலனின் படைப்பின் நோக்கமே அவர் இந்து சமுதாயத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்பதே. அந்தப்பணியை அவர் திறம்பட செய்து கொண்டிருக்கிறார். அவர் நீண்ட காலம் வாழவேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்"


கங்கை இன்னும் வற்றிவிடவில்லை!
- இராம.கோபாலன்


வீரவாளுடன் இராம.கோபாலன்


"இன்று ஹிந்துக்கள் இனம்புரியாத ஒருவித அச்ச்ததுடன் வாழ்ந்து வருகிறார்கள். எதற்கு பயப்படுகிறோம் என்று தெரியாமலேயே பயந்து கொண்டிருக்கிறார்கள். சுயநலம் வரும்போது பயமும் வந்துவிடும். துரதிருஷ்டவசமாக இன்று துறவிகள் கூட பயப்படுகிறார்கள். துறவிக்கு வேந்தனும் துரும்பு. ஆனால் இதையெல்லாம் இப்போது மறந்து விட்டார்கள். நான் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது வாழ்க்கையில் எதை சாதித்தோம் என்று யோசித்துப் பார்த்தேன். அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. நடப்பது நடந்தே தீரும். எல்லாம் நன்மைக்கே. இந்த மூன்று விஷயங்களை நான் அப்போது தெரிந்து கொண்டேன். அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கை உள்ளவனை யாராலும் அசைக்க முடியாது.

.
"என்னை சந்திக்கும் பலர் எச்சரிக்கையாக இருங்கள் என்று ஆலோசணை சொல்கிறார்கள். இறைவன் நினைக்கும்வரை என் உயிர் போகாது. அவன் நினைத்து விட்டால் என்னை யாராலும் காப்பாற்ற முடியாது. என் கதை முடிந்துவிட்டது என்று என்னை விட்டுவிட்டு சென்று விட்டார்கள். மதுரை மீனாட்சி என்னைக் காப்பாற்றி விட்டாள். அதனால் எனக்கு உயிர் பயம் கிடையாது. மாதத்திற்கு 28 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இந்த வயதில் நீங்கள் எப்படி சுற்றுகிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். சுற்றுப்பயணம் செய்யாவிட்டால் நான் இறந்துபோய் விடுவேன்.
"இந்து முன்னணிக்கு தமிழகம் முழுவதும் 12,000 தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். தலைவர்கள் என்றால் கரை வேட்டி கட்டிக்கொண்டு தெரு கூட்டுபவர்கள் அல்ல. காலில் சக்கரம், வாயில் சர்க்கரை, நெஞ்சில் நெருப்பு, தலையில் ஐஸ் என நான்கு குணநலன்களுடன் இருப்பவர்களே தலைவர்கள். காலில் சக்கரம் கட்டியவர்களைப் போல எப்போதும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். வாயில் சர்க்கரை போட்டது போல மக்களிடம் இனிமையாகப் பேச வேண்டும். நெஞ்சில் எப்போதும் கொள்கை நெருப்பு கனன்று கொண்டிருக்க வேண்டும். தலையில் ஐஸ் வைப்பது போல பிரச்சினை ஏற்படும்போது அதனை சாதுர்யமாக சமாளிக்கத் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட தலைவர்கள்தான் எங்களுக்கு தேவை. இப்படிப்பட்டவர்களை நாம் உருவாக்க வேண்டும்.

"இன்று ராமபிரானை ராமன் என்று ஒருமையில் சொல்லக்கூடிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இராம.கோபாலனாகிய நான்தான் பொறுப்பு. தமிழகத்தில் ராமபக்தியை வளர்க்க நான் தவறிவிட்டேன். எனவே தமிழகத்தில் ராம பக்தியை வளர்க்க சென்னையில் ராமாயண மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பணியில் நீங்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
"பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கு வேலைக்குச் சென்ற ஒரு இளைஞர் கங்கை வற்றிவிட்டது என்ற செய்தியை படித்து அதிர்ச்சி அடைந்தான். கங்கைதானே ஹிந்துப் பண்பாட்டிற்கு ஆதாரம். அதுவே வற்றிவிட்டதா என்று அந்த இளைஞனுக்கு தூக்கமே போய்விட்டது. கங்கை வற்றவில்லை என்ற செய்தியை இந்தியாவில் உள்ள நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட பிறகுதான் அவனுக்கு தூக்கம் வந்தது. சென்னை ஆர்.கே. நகரில் விநாயகர் சதுர்த்தியின்போது தி.மு.கவினர் இந்து முன்னணித் தொண்டர்களைத் தாக்கினார்கள். இதனால் இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

எஸ்.வேதாந்தம், ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் இராம.கோபாலனிடம் ஆசி பெறுகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் போலீசார் அடித்ததில் கர்ணன் என்ற தொண்டருக்கு கை மணிக்கட்டு உடைந்து விட்டது. அவர் சாக்கு தைத்து பிழைப்பு நடத்தும் கூலித் தொழிலாளி. கர்ணனைச் சந்திக்க சென்ற இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் குடும்ப செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று 500 ரூபாயை கொடுத்தார். அதனை வாங்கிய கர்ணன் அதோடு 1 ருபாயை சேர்த்து ரூ. 501 ஆக தென்காசி குமார் பாண்டியன் குடும்பத்தினருக்கு கொடுத்து விடுங்கள் என்றுகூறி கொடுத்து விட்டார். கங்கை இன்னும் வற்றிவிடவில்லை என்பதை கர்ணன் உணர்த்தி விட்டார்"

2 comments:

ஜடாயு said...

வீரத்துறவி இராம.கோபாலன் தென்னகத்தின் இந்து எழுச்சியின் நாயகர்களில் ஒருவர்.

எண்பதாண்டு காலம் நிறைவாழ்க்கை வாழ்ந்த அவர் மேலும் நீடூழி வாழ்ந்து சமுதாயத்திற்கு வழிகாட்ட இறை அருள்புரியட்டும்.

Anonymous said...

அரிவாள் வெட்டுப்பட்டும் ராமாயண மாநாடு நடத்தும் ராமகோபலனும், இரண்டு கை மணிக்கட்டுகள் முறிந்தும் தன்னுடைய கடைசி பாதுகாப்பைக்கூட தியாகம் செய்யத் தயாராகவிருக்கும் கர்ணனும் திகைக்கவைக்கிறார்கள்.

அவ்விருவர் பாதங்களையும் நான் பணிகிறேன்.